உ.பி: காங்கிரஸில் இருந்து பாஜக-வுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர்; நெருக்கடியில் கட்சித் தலைமை!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருவதோடு, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு கடுமையான போட்டியை கொடுக்கவேண்டும் என்பதற்காக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இந்தமுறை தேர்தலில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தி தலைமையில் இந்தத் தேர்தலைச் சந்தித்து வருகிறது. இதனால், உத்தரப்பிரதேசத்தில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, சமாஜ்வாடி கட்சியிலிருந்து சில தலைவர்கள் பா.ஜ.க-வுக்கும், பா.ஜ.க-விலிருந்து சில தலைவர்கள் சமாஜ்வாடி கட்சிக்கும் தாவிவிட்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என் சிங்

இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ரத்தன்ஜித் பிரதாப் நரேன் சிங் திடீரென அந்தக் கட்சியிலிருந்து விலகி இருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சித்தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி இருக்கிறார். அதோடு அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ``எனது அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆர்.பி.என்.சிங் காங்கிரஸில் இருந்து விலகுவது அந்தக் கட்சிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைமுறை தலைவராக அறியப்பட்ட சிங் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நட்சத்திர பிரசார பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. அவரது பெயர் நட்சத்திர பிரசார பேச்சாளர்கள் பட்டியலில் வெளியான அடுத்த நாளே சிங் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு நிற்காமல் உடனே பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ராகுல் காந்தி

டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் அவர் பா.ஜ.க-வில் இணைந்தார். அதன் பிறகு வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ``பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தலைமையில் நாட்டுக்கு பங்களிப்பை வழங்க ஆவலாக இருக்கிறேன்" குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜோதிர்மாதித்யா சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி போன்ற முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். தற்போது தேர்தல் நேரத்தில் ஆர்.பி.என்.சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். சிங்குக்கு பா.ஜ.க சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/34cbyLy

Post a Comment

0 Comments