கேரள மாநிலத்தில் ஆண், பெண் சமத்துவத்துக்காக ஆக்கபூர்வமான பல முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதில் சமீபத்தில் பள்ளி சீருடையாக மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பேன்ட், சட்டை அறிமுகப்படுத்தப்படது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கேரள பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மணவிகளும், பெண்ணிய ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதுபோல மனைவியின் சுமையை குறைக்க குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வரும் ஆண்களும் ஆங்காங்கே கவனம்பெற்று வருகின்றனர்.
இவ்வாறு ஆண், பெண் சமத்துவத்தை நிலைநிறுத்தும் விதமாகப் பல முன்னுதாரண நிகழ்வுகள் கேரளத்தில் நடைபெற்று வருகின்றன. அதன் வகையில், சர்ச் ஒன்றில் குழந்தை ஏசு, புனித மரியாள், புனித ஜோசப் ஆகியோரின் திருக்குடும்ப பதுமைகள் அமைப்பதில் புதுமை செய்துள்ளது திருச்சூரைச் சேர்ந்த சர்ச் நிர்வாகம்.
Also Read: மாணவ மாணவிகளுக்கு ஒரே உடை... கேரள பள்ளியின் `ஜெண்டர் நியூட்ரல்' சீருடைக்கு ஆதரவும், எதிர்ப்பும்!
வழக்கமாக கிறிஸ்துவ தேவாலயங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பதுமைகளில் தேவமாதா, குழந்தை ஏசுவை கையில் ஏந்தியபடி இருப்பார். அருகில் தந்தையான ஜோசப் இருப்பார். ஆனால் திருச்சூர் பெருங்கோட்டுக்கரை புனித மரியா சர்ச்சின் முன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கலவையால் செய்யப்பட்டுள்ள திருக்குடும்ப சிற்பங்களில் புதுமை புகுத்தப்பட்டுள்ளது. அதில் ஜோசப் குழந்தை ஏசுவை பாசத்துடன் கையில் ஏந்தியபடி நிற்கிறார். புனித மரியாள் அருகில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார்.
வழக்கத்துக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பம் கேரளத்தில் பேசு பொருளாகியுள்ளது. போப் பிரான்சிஸ் அறிவித்துள்ள புனித ஜோசப்பின் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளதாக சர்ச் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தந்தையர்கள் சங்கமான பித்ரு சங்கம் ஏற்பாட்டின்பேரில் இந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Also Read: கேரளா: `மக்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திவிட்டார்கள்' - பினராயி விஜயன் தகவல்!
``ஆண், பெண் சமத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்த சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாய்க்கு மட்டும் இல்லை, தந்தைக்கும் அதற்கான பொறுப்பு இருக்கிறது. எனவே இருவரின் பங்கு குறித்த விழிப்புணர்வுக்காக இந்தச் சிற்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று பித்ரு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாற்றங்கள் தொடரட்டும்!
from தேசிய செய்திகள் https://ift.tt/3KNYSLy
0 Comments