உத்தரப்பிரதேசத்திலுள்ள 403 தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை ஏழு கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேசத் தேர்தலில் 403 இடங்களில், வெறும் ஏழு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த முறை பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், பிரியங்கா காந்தி தலைமையில், இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்களை நம்பி அந்தக் கட்சி தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டால் கிட்டத்தட்ட மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிடலாம் என்ற எழுதப்படாத விதி இருப்பதால், அங்கு ஆட்சியைப் பிடிப்பதில், அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
நாட்டிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகள்கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில், தற்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆளும் பா.ஜ.க கடுமையாகப் பணியாற்றிவருகிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. இதில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்குச் செல்லும் இடமெல்லாம் ஆதரவு பெருகிவருகிறது. வரும் தேர்தலில் அகிலேஷ் யாதவ் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பதவி ஏற்பார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் முக்கியத் தலைவர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி என 30 அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
Also Read: உத்தர் அரசியல்: காங்கிரஸ் ஆட்சியில் உள்குத்து, வெளிக்குத்து அட்ராசிட்டிஸ் | மினி தொடர்|பாகம் - 2
from தேசிய செய்திகள் https://ift.tt/3nUdi2L
0 Comments