மும்பையின் ஒன்றாவது மண்டலத்தில் போலீஸ் துணை கமிஷனராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹரிபாலாஜி. மும்பையில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் ஹரி பாலாஜி, 73வது குடியரசுத் தினத்தை குறிக்கும் வகையில் மும்பையில் 73 கிலோமீட்டர் தூரம் ஓடி சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை வெறும் 8.30 மணி நேரத்தில் சாதித்துள்ளார்.
மும்பையின் பாந்த்ரா - குர்லா காம்ப்ளக்சில் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி முலுண்ட் பகுதியை நோக்கி ஓட ஆரம்பித்தார். அவருடன் மேலும் 9 பேர் ஓட ஆரம்பித்தனர். முலுண்டிலிருந்து மீண்டும் பாந்த்ரா - குர்லா காம்ப்ளக்சிற்கு வந்து அங்கிருந்து நரிமன் பாயிண்டில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவிற்கு ஓடி தனது இலக்கை முடித்தார். அவருடன் ஓடி வந்தவர்களில் 6 பேர் 55 கிலோமீட்டரில் தங்களது பயணத்தை முடித்துக்கொண்டனர். 3 பேர் மட்டும் இறுதிவரை ஓடி இலக்கை அடைந்தனர். கடைசி 21 கிலோமீட்டர் தூரத்தில் மேலும் 70 பேர் ஹரிபாலாஜியுடன் இணைந்து கொண்டனர்.
போலீஸ் துறையில் பல விருதுகளை பெற்றுள்ள ஹரிபாலாஜி, கடந்த ஆண்டும் இதே போன்று தான் பணியாற்றிய அமராவதியில் 72வது குடியரசுத் தினத்தையொட்டி 72 கிலோமீட்டர் தூரம் ஓடினார். மகாராஷ்டிராவில் நக்சலைட்கள் அதிகமுள்ள பகுதியில் பணியாற்றிய ஹரிபாலாஜி தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ஹரிபாலாஜியிடம் இது குறித்து கேட்டதற்கு, நாட்டின் குடியரசுத்தினத்தை கௌரவப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டு வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3Asmn7Z
0 Comments