ஒமைக்ரான்: மண்டப நிகழ்ச்சிகளில் அனுமதி பாதியாக குறைப்பு! - கேரளாவில் இறுகும் கட்டுப்பாடுகள்

இந்தியாவில் கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளம். மற்ற மாநிலங்களில் கொரொனா பரவல் எண்ணிக்கை குறைந்தாலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் கண்ணாமூச்சி காட்டுகிறது. நேற்று முந்தினம் 2,560 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்த நிலையில், நேற்று 3,640 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 30-ம் தேதி முதல் இந்த மாதம் 2-ம் தேதி வரை நான்கு நாட்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு விதித்தது கேரள அரசு. இருப்பினும் கொரோனா பரவல் எதிர்பார்த்த அளவில் கட்டுப்படவில்லை. அதுமட்டுமல்லாது கொரோனாவின் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் வைரஸ் பரவல் கேரளத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பரிசோதனை

இன்றைய நிலவரப்படி கேரளாவில் ஒமைக்ரானால் பாதித்தவர்கள் என்ணிக்கை 181 ஆக உள்ளது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒமைக்ரான் தொற்று காரணமாக ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதுவரை மண்டபங்கள், உள் அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 150 பேர் கலந்து கொள்ளலாம் என கட்டுப்பாடு இருந்தது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இனி 75 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல திறந்தவெளி நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்று இருந்த நிலையில், இனி 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

விமான நிலையங்களில் பயணிகளின் பரிசோதனை கடுமையாக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதி உதவி வழங்குவதற்கான விண்ணப்பங்களை விரைந்து வழங்க வேண்டும் எனவும், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments