கொரோனா விவகாரம்: பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்ளும் சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகள்! - என்ன நடக்கிறது?

கேரள மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்றைய கணக்குப்படி 46,387 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரள மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்து இருபதாயிரத்து ஐநூற்று பதினாறாக உயர்ந்தது. தொடர்ந்து கொரோனா பாதித்து வருவதால் திறந்தவெளிகளில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் 150 பேருக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது என கேரள அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி கோழிக்கோட்டில் நடந்த சி.பி.எம் மாவட்ட மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு பேசினார். இது விவாதத்துக்குள்ளானது. அதேபோல, திருவனந்தபுரம் மாவட்ட மாநாட்டுக்கான ஆயத்த நிகழ்ச்சியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் மைதானத்தில் திருவாதிரை களி என்ற நடனம் ஆடினர். இதையடுத்து சி.பி.எம் மாநாடு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கின.

கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி.சதீசன்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி.சதீசன் கூறுகையில், ``சி.பி.எம் மாநாடுகளை நடத்துவதற்காக சில மாவட்டங்களில் கொரோனா விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளனர். ஏ.கே.ஜி சென்டரில் (சி.பி.எம் மாநில அலுவலகம்) இருந்துதான் கொரோனா விதிமுறைகள் தீர்மானிக்கப்படுகின்றன. சி.பி.எம் மரணத்தின் வியாபாரியாக மாறியுள்ளது. இதற்கு சி.பி.எம் தலைவர்களும் அமைச்சர்களும் பதில் சொல்ல வேண்டும். மாநாடு நடத்தவேண்டும் என்பதற்காக திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களை ஏ, பி, சி என எந்த கேட்டகிரியிலும் கொண்டுவரவில்லை.

திருவனந்தபுரத்தில் சி.பி.எம் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சருக்கும், எம்.எல்.ஏ-க்களும், நூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கும் கொரோனா பாதித்தது. ஆனாலும் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளாமல், நோய் பரப்புபவர்களாக மாறினர். கட்சிக்கு வேண்டி கொரோனா விதிமுறைகளை மாற்றும் ஒரே மாநிலம் இந்தியாவில் கேரளாவாகத்தான் இருக்கும். கொரோனா எப்படி பாதித்தாலும் கட்சி மாநாட்டை நடத்துவோம் என்ற பிடிவாதத்துடன் அவர்கள் இருக்கிறார்கள்" என்றார்.

கொடியேரி

இதற்கு பதில் கூறிய சி.பி.எம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், ``சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா வரவேண்டும் என சி.பி.எம் கட்சியே விரும்புமா? கொரோனா விதிமுறைகளை கடைபிடித்துதான் சி.பி.எம் மாநாட்டை நடத்துகிறோம். நாங்கள் மாநாடு நடத்தியதாலா நடிகர் மம்முட்டி போன்றவர்களுக்கு கொரோனா வந்தது? அவர் எந்த மாநாட்டில் கலந்துகொண்டார். மாவட்ட கலெக்டர்களிடம் அனுமதிபெற்று, ஹாலில் மாநாடுகள் நடத்தப்படுகின்றன" என்றார்.

இரு தரப்பினரின் இந்த கருத்து மோதல் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: காங்கிரஸ் Vs சி.பி.எம்: தொடரும் 'அரசியல் படுகொலை’களால் பற்றி எரியும் கேரளா! - என்ன நடக்கிறது அங்கு?



from தேசிய செய்திகள் https://ift.tt/33VEpU2

Post a Comment

0 Comments