கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின், ரூ.1,928 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது போல, இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்குத் தமிழக மக்கள் வரவேற்பளித்தனர்.
ஆனால் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த கர்ஜோல், ``இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம்" என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் கர்நாடக மாநில முதலமைச்சர் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கக் கூடாது என்பதற்காகப் பிப்ரவரி மாத முதல் வாரம் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
இதனால் இன்று காலை பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கர்நாடக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``காவிரி ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். நாட்டின் நீர்வளம் கொள்கைகளின்படி குடிநீர்த் தேவைக்குத் தான் முதலிடம் தரப்பட்டுள்ளது. சட்ட பூர்வ அடிப்படையில் குடிநீர் திட்டத்தைத் தொடங்கும் உரிமை தமிழகத்திற்கு உண்டு” என ஒகேனக்கல் தொடர்பான கர்நாடக அமைச்சர் அறிக்கைக்குத் தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
முதலாவது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1,928 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி காவிரி ஆற்று நீர், நீரேற்று நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்துக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
Also Read: ``காவிரி நீர் மரபுரிமை; பிச்சையல்ல!’’ - கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு கொந்தளிக்கும் மணியரசன்
from தேசிய செய்திகள் https://ift.tt/3GVomnP
0 Comments