பாஜக - 2; காங்கிரஸ், ஆம் ஆத்மி எத்தனை? - ஐந்து மாநிலத் தேர்தல் களத்தில் முந்துவது யார்?!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், எந்த மாநிலத்தில் யார் முந்துகிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் அலசலாம்!

உத்தரப்பிரதேசம்:-

வெற்றி வாய்ப்பு - பா.ஜ.க
எதிர்க்கட்சி வாய்ப்பு - சமாஜ்வாடி

இந்தியாவிலேயே அதிக தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், ஆளும் பா.ஜ.க அரசுமீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் தனித் தனியே போட்டியிடுவது அந்தக் கட்சிக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது. அங்கு, காங்கிரஸும், பகுஜன் சமாஜும் மிகக் குறைந்த இடங்களைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க-வுக்கு கடுமையான சவால்களை அளித்துக் கொண்டிருக்கிறது. உ.பி முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அகிலேஷ், சிறு சிறு கட்சிகளோடு கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார்.

அமித் ஷா- யோகி - மோடி

Also Read: உ.பி தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் அகிலேஷ் யாதவ்... யோகிக்காக பா.ஜ.க-வின் பிளான் என்ன?!

பா.ஜ.க, உ.பி-யில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கிவைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு பஞ்சாப்பில் பிரதமரின் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை உ.பி பிரசாரக் களத்தில் எடுத்துச் சொல்லி, அனுதாப வாக்குகளைப் பெறக்கூடிய பணிகளையும் பா.ஜ.க செய்துவருவதாகத் தெரிகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்புகளில், பா.ஜ.க சுமார் 45 சதவிகித வாக்குகளைப்பெறும் என்றும், சமாஜ்வாடி 30 சதவிகித வாக்குகளைப்பெறும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், தற்போதைய நிலவரப்படி உ.பி தேர்தல் களத்தில் முந்தி நிற்பது பா.ஜ.கதான்!

பஞ்சாப்;-

வெற்றி வாய்ப்பு - காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி!

மத அவமதிப்பு கொலைகள், காங்கிரஸ் உட்கட்சிப் பூசல்கள், பிரதமர் பாதுகாப்பில் குளறுபடிகள் என எப்போதும் பரபரப்பாகவே இருப்பது பஞ்சாப் தேர்தல் களம்தான்! பஞ்சாப்பில் ஆளும்கட்சியான காங்கிரஸுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லியில் தொடங்கப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமான திட்டங்களை, பஞ்சாப்பிலும் அமல்படுத்துவோம் என வாக்குறுதிகளை வழங்கி தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அந்தக் கட்சிக்குப் பிரபலமான முதல்வர் வேட்பாளர் இல்லாதது பின்னடைவாக இருந்துவருகிறது.

பா.ஜ.க-வுக்கு, பஞ்சாப்பில் மிகப் பெரிய ஆதரவு இல்லை என்ற நிலையே நீடித்துவருகிறது. பஞ்சாப் காங்கிரஸின் முகமாக விளங்கிய அமரீந்தர் சிங் கட்சியை விட்டு விலகிச் சென்று, பா.ஜ.க-வோடு கைகோர்த்திருக்கிறார். மாநிலக் கட்சியான சிரோமணி அகாலி தளம் பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால், இவர்கள் யாரும் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

சரண்ஜித் சிங் சன்னி - பஞ்சாப் முதல்வர்

காங்கிரஸைப் பொறுத்தவரை, உட்கட்சிப் பூசல்கள், சமீபத்திய மதக் கலவரங்கள், மின்சாரப் பிரச்னைகள் உள்ளிட்டவற்றால் தவித்துவருகிறது. இருந்தும், தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல்வரான சரண்ஜித் சிங் சன்னிமீது பஞ்சாப் மக்களுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. `பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட பிரச்னைகளில், மாநில உரிமையை விட்டுக்கொடுக்காமல் அவர் நடந்துகொண்டதாக மக்கள் நம்புகிறார்கள்' என்றும் சொல்லப்படுகிறது.

சமீபத்திய கருத்துக் கணிப்புகள் பலவும், ஆம் ஆத்மி கட்சியே பஞ்சாப் தேர்தல் களத்தில் முந்துவதாகச் சொல்கின்றன. எனினும் அந்தக் கருத்துக் கணிப்புகள் அனைத்திலும், காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையேயான வாக்கு சதவிகித வித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கிறது.

கோவா:-

வெற்றி வாய்ப்பு - பா.ஜ.க, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி

கோவாவில், சுரங்கத் தொழிலுக்கு 2018-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. கட்சிகள் அனைத்தும் அதைக் கையிலெடுத்து அரசியல் செய்துவருகின்றன. கடந்த தேர்தலில் தனித்து அதிக தொகுதிகளை வென்றது காங்கிரஸ். காங்கிரஸிடமிருந்த 17 எம்.எல்.ஏ-க்களில், 13 பேர் பா.ஜ.க-வுக்கு தாவிவிட்டனர். அங்கு, உட்கட்சிப்பூசல்களால் காங்கிரஸ் கட்சி தவித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல கடந்த ஒரு மாதத்துக்குள்ளாக, 3 எம்.எல்.ஏ-க்களையும், ஒரு அமைச்சரையும் இழந்திருக்கிறது பா.ஜ.க. நேற்று (டிச.10) பா.ஜ.க அமைச்சரான மைக்கேல் லோபோ தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க-விலிருந்து வெளியேறிவிட்டார். அவர் காங்கிரஸில் இணையப்போவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கோவாவில் 25 சதவிகிதத்துக்கும் மேல் கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி இருக்கிறது. கிறிஸ்தவர்களின் முகமாக விளங்கும் மைக்கேல் லோபா காங்கிரஸில் இணைந்தால், அது அவர்களுக்குப் பலமாக இருக்கும்.

கெஜ்ரிவால்

Also Read: சண்டிகரில் முத்திரை பதித்த ஆம் ஆத்மி... பஞ்சாப் தேர்தலில் வாகை சூடுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?!

கோவாவில் வேகமாக வளர்ந்துவரும் ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸைவிட அதிக இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெறும் எனவும் சொல்லப்படுகிறது. கோவா தேர்தலில், மாநிலக் கட்சியான மகாராஷ்டிரவாடி கோமந்தகா கட்சியுடன் மம்தா பானர்ஜி கூட்டணி அமைத்திருக்கிறார். ஆனால், இந்தக் கூட்டணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதையே களத்திலிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.

சமீபத்திய கருத்துக் கணிப்பில், 32 சதவிகித வாக்குகளுடன் பா.ஜ.க முதலிடத்தையும், 22 சதவிகித வாக்கு வங்கியுடன் ஆம் ஆத்மி இரண்டாமிடத்தையும், 20 சதவிகித வாக்குகளுடன் காங்கிரஸ் மூன்றாமிடத்தையும் பிடிக்குமெனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரகாண்ட்:-

வெற்றி வாய்ப்பு - பா.ஜ.க
எதிர்க்கட்சி வாய்ப்பு - காங்கிரஸ்

உத்தரகாண்ட் மாநிலத்தில், விவசாயிகள் போராட்டம், கொரோனாவை சரியாகக் கையாளாதது உள்ளிட்ட காரணங்களால், ஆளும் பா.ஜ.க அரசுமீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, இரண்டு முதல்வர்களை மாற்றிவிட்டு, தற்போது மூன்றாவதாக புஷ்கர் சிங் தாமியை முதல்வராக்கியிருக்கிறது பா.ஜ.க. உத்தரகாண்டில், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கிற உட்கட்சிப்பூசல்களைச் சாதகமாக்கி, பா.ஜ.க முந்தி நிற்கிறது.

சமீபத்திய கருத்துக் கணிப்புகளில், பா.ஜ.க-வே வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி, தனது முதல் தேர்தலிலேயே 13 சதவிகித வாக்குகள் வரை பெறும் எனவும் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

பா.ஜ.க - காங்கிரஸ்

மணிப்பூர்:-

வெற்றி வாய்ப்பு - காங்கிரஸ், பா.ஜ.க இடையே கடும் போட்டி!

காங்கிரஸின் கோட்டையாக இருந்த மணிப்பூரில் 2017-ம் ஆண்டு, தேர்தலுக்குப் பிறகு அமைந்த கூட்டணியால் கொடியேற்றியது பா.ஜ.க. தற்போதைய ஆட்சியில் பா.ஜ.க-வோடு இருக்கும் தேசிய மக்கள் கட்சியும், நாகா மக்கள் முன்னணியும் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாகத் தெரிகிறது. இருந்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலரும் பா.ஜ.க-வுக்கு தாவிவிட்டதால், அந்தக் கட்சி பலம் பொருந்தியிருக்கிறது. பா.ஜ.க ஆட்சி மீதிருக்கும் அதிருப்தி காரணமாக, கடைசி நேரத்தில் காங்கிரஸ் பக்கமும் காற்று வீச வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், பா.ஜ.க 36 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 33 சதவிகித வாக்குகளையும் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தொங்கு சட்டமன்றம் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, ஐந்து மாநிலத் தேர்தல்களில் எந்தக் கட்சி முந்துகிறது, எங்கே கடும் போட்டி நிலவுகிறது என்பதைத்தான் இங்கே சொல்லியிருக்கிறோம். தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நாள்கள் இருப்பதால், காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்!


from தேசிய செய்திகள் https://ift.tt/3qdqJfM

Post a Comment

0 Comments