சுவீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த நவம்பர் 17-ம் தேதி காணாமல் போய்விட்டார். இது குறித்து அந்தச் சிறுமியின் தந்தை போலீஸில் புகார் செய்திருந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுமி அதிக நேரம் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதுதெரியவந்ததால், அவர் இன்ஸ்டாங்க்ராம் நண்பர்களின் பட்டியலை அலசியிருக்கின்றனர். அப்போது, அந்தச் சிறுமி மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் அதிக நேரம் சாட்டிங் செய்தது தெரியவந்தது.
அதையடுத்து, அவர் மும்பைக்குச் சென்றிருக்கலாம் என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அதனடிப்படையில், போலீஸார் இண்டர்போல் மஞ்சள் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இது குறித்து மும்பை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சுவீடன் நாட்டு போலீஸார் அளித்த தகவல்களின் அடிப்படையில், காணாமல் போன சிறுமியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அவரின் மும்பை நண்பர் பற்றிய தகவல்களைச் சேகரித்தனர். சைபர் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி அந்தச் சிறுமியின் இன்ஸ்டாகிராம் நண்பரைக் கண்டுபிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், சிறுமி மும்பை சீத்தாகேம்ப் பகுதியிலிருப்பது தெரியவந்தது. உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு அந்தச் சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதோடு இது குறித்து டெல்லியிலிருக்கும் சுவீடன்நாட்டுத் தூதரகத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சுவீடன் போலீஸார் உடனே ஸ்வீடனில் தன் மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்திருந்த தந்தைக்குத் தகவல் கொடுத்தனர். சிறுமியின் தந்தை உடனே மும்பைக்கு விரைந்து வந்தார். மும்பை போலீஸார் வழக்கமான நடைமுறைகளை முடித்த பிறகு சிறுமியை அவர் தந்தையிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து மும்பை குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் மிலிந்த் பராம்பே கூறுகையில், ``சிறுமி காணவில்லை என்று எங்களுக்கு டிசம்பர் 7-ம் தேதி தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் அதிகாரி மங்கள் சிங் சவான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. முதலில் சிறுமியின் இன்ஸ்டாகிராம் நண்பரைக் கண்டுபிடித்து அதன் மூலம் சிறுமியை மீட்டோம். சிறுமி எப்படி மும்பைக்கு வந்தார் என்று மர்மமாக இருக்கிறது. கடத்தி வரப்பட்டாரா அல்லது ஆசை வார்த்தை கூறி வரவழைக்கப்பட்டாரா என்பது குறித்து அவரின் இன்ஸ்டாகிராம் நண்பரிடம் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள்
0 Comments