மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மும்பை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதியாக இருப்பவர் புஷ்பா கெனடிவாலா. கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா, மைனர் பெண்ணை ஆடைக்கு மேல் மார்பகப் பகுதியில் தொட்டதை பாலியல் தாக்குதலாகக் கருத முடியாது என்றும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் தோலுடன் தோல் தொடாத தொடுதல்களை பாலியல் தாக்குதலாகக் கருதமுடியாது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேசிய பெண்கள் கமிஷன் உட்பட பல்வேறு தரப்பினரும் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீதிபதி புஷ்பா வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
Also Read: `சொத்துக்காக பெற்றோரை பிள்ளைகள் சித்ரவதை செய்கின்றனர்!' - மும்பை உயர் நீதிமன்றம்
தொடர்ந்து, 5 வயது சிறுமியை சிறார் வதை செய்த மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா, பேன்ட் ஜிப்பை கழற்றுவது போஸ்கோ சட்டத்தின் கீழ் பாலியல் தாக்குதலாகக் கருத முடியாது என்று கூறி குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். இத்தீர்ப்பும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீதிபதி புஷ்பா மும்பை உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாகத்தான் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரது பதவியை சுப்ரீம் கோர்ட் கமிட்டி தொடர்ந்து நீட்டித்து வந்தது. கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதி புஷ்பாவின் பதவியை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் என்பதை ஓர் ஆண்டாகக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இப்பதவி நீட்டிப்பு முடிந்த பிறகு மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு செய்யப்படவேண்டும்.
ஆனால் நீதிபதி புஷ்பா அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்புகளைத் தொடர்ந்து, அவரை நிரந்தர நீதிபதியாக்கும்படி கூறி சுப்ரீம் கோர்ட் கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததை அந்தக் கமிட்டியே இப்போது திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. இதனால் நீதிபதி புஷ்பாவின் பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டதோடு பிப்ரவரியில் இருந்து மீண்டும் நீதிபதி புஷ்பா மாவட்ட நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
from தேசிய செய்திகள்
0 Comments