`சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடியவர்!’ - வேலூரில் கேரள எம்.எல்.ஏ தாமஸ் காலமானார்

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருக்காட்கரை தொகுதி எம்.எல்.ஏ-வுமான பி.டி.தாமஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 71. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாமஸ், கடந்த 20 நாள்களாக சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவந்தார். இன்று காலை 10.10 மணிக்கு அவரின் உயிர்ப் பிரிந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருக்கின்றன.

பி.டி.தாமஸ்

இடுக்கி மாவட்டம் உபத்தோடு புதிய பரம்புப் பகுதியில் பிறந்தவர் தாமஸ். சட்டப் பட்டதாரியான அவர், கல்லூரிக் காலத்திலேயே காங்கிரஸ் மாணவர் அமைப்பின் மூலமாக அரசியலுக்குள் நுழைந்தார். பின்னர், இடுக்கி மாவட்டச் செயலாளர், மாநில பொதுச்செயலாளர் என பல்வேறு பதவிகளையும் காங்கிரஸ் கட்சியில் வகித்திருக்கிறார். 1991, 2001 ஆகிய காலக்கட்டங்களில், தொடுபுழாவிலிருந்து கேரள சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்வுச்செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு இடைப்பட்ட 1996 மற்றும் 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களில், அதே தொடுபுழா தொகுதியிலேயே தோல்வியடைந்திருக்கிறார். இதையடுத்து, 2009-ல் இடுக்கி மக்களவைத் தொகுதி தேர்தலில் வெற்றிபெற்றார்.

2009-ல் இருந்து 2014 வரை எம்.பி-யாக இருந்தவர், 2016 சட்டமன்றத் தேர்தலில் திருக்காட்கரை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில், ‘``கேரளாவில், காதலை ஏற்க மறுக்கும் இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக’’ அழுத்தமாக குறிப்பிட்டு கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் அவரின் மறைவு கேரள காங்கிரஸாரையும், தொகுதி மக்களையும் மிகுந்த சோகத்துக்குள்ளாக்கியிருக்கிறது. பி.டி.தாமஸ் உடலை கேரளா கொண்டுச்செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

ஆளுநரின் இரங்கல் செய்தி

இன்று மாலை 3.30 மணியளவில், ஆம்புலன்ஸில் சாலை மார்க்கமாகவே கேரளாவுக்குக் காங்கிரஸார் கொண்டுச் செல்கிறார்கள்.

‘‘பி.டி.தாமஸ், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அஞ்சாமல் உறுதுணையாக இருந்தவர். ஒரு துடிப்பான அர்ப்பணிப்புள்ள சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்களிடம் அன்பாக பழகியவர். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், தொகுதி மக்களுக்கும் இதயப் பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்‘‘ என்று கேரள ஆளுநர் ஆரீஃப் முகமது கான் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments