மும்பை: ராகுல் காந்தி கூட்டத்துக்கு அனுமதி இல்லை?! - கூட்டணியில் இருந்தும் செக் வைக்கும் சிவசேனா

மும்பையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. எனவே வரும் 28-ம் தேதி தாதர் சிவாஜி பார்க்கில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் கூட்டத்திற்கு மாநகராட்சி நிர்வாகமும், போலீஸாரும் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு மாநில அரசும், சிவசேனா ஆளும் மும்பை மாநகராட்சியும் அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் பொதுக்கூட்டத்திற்கான வேலைகளை உடனே தொடங்க முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

ராகுல் காந்தி

இதையடுத்து மும்பை காங்கிரஸ் கட்சி மாநில அரசுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு அக்டோபர் மாதமே மனுக்கொடுக்கப்பட்டு விட்டது. இக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. எனவே பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனுவை தாக்கல் செய்துள்ள மும்பை காங்கிரஸ் தலைவர் பாய்ஜக்தாப் இது குறித்து கூறுகையில், ``கூட்டத்திற்கு என்ன காரணத்திற்காக அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. கொரோனா விதிகளை முழுமையாக கடைப்பிடிப்போம் என்று உத்தரவாதம் அளித்துள்ளோம். அப்படி இருந்தும் இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. கூட்ட ஏற்பாடுகளை கவனிக்க நேரம் இல்லாத காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்று தெரிவித்தார். பாய் ஜக்தாப் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் பிரதீப் தோரடிடம் இது குறித்து கேட்டதற்கு, ``காங்கிரஸ் கட்சி சிவாஜி பார்க் மைதானத்தை வரும் 22-ம் தேதியில் இருந்து 28-ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டுள்ளது. காங்கிரஸ் தொடக்க நாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடத்த இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டதற்கு, ``பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பதா வேண்டாமா என்பது குறித்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பிவிட்டோம். மாநில அரசுதான் இதில் இறுதி முடிவு எடுக்கவேண்டும்” என்று தெரிவித்தனர். மாநில நிதியமைச்சரும், துணை முதல்வருமான அஜித்பவார் இது குறித்து கூறுகையில், ``கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்” என்று குறிப்பிட்டார். இதனால் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/3INpLy1

Post a Comment

0 Comments