கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில வளர்ப்பு பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. தடுப்பு நடவடிக்கையாக 55 ஆயிரம் வாத்துகளை கொல்ல கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, மூன்று மாநில எல்லைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகவிலிருந்து கோழி மற்றும் பறவைகள் நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது கேரளா - தமிழக எல்லைகளான, சோலாடி, பூலக்குண்ணு, நாடுகாணி, தாளூர் உள்ளிட்ட 6 சோதனை சாவடிகளிலும், கர்நாடக மாநில எல்லையான கக்கநல்லாவிலும் கால்நடை பராமரித்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இரு மாநிலங்களில் இருந்து கோழி, வாத்து மற்றும் காடை உள்ளிட்ட பறவைகள் ஏற்றி வரும் வாகனங்கள் நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் நுழையும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் கிரிமி நாசினி தெளித்த பின்னரே மாவட்ட எல்லைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. எல்லை ஓரத்தில் இருக்கும் 8 சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொண்ட குழுவினர் எந்நேரமும் கிரிமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், தற்போது நீலகிரியில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக பறவை காய்ச்சல் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து நீலகிரி கால்நடை பராமரிப்புதுறை மண்டல இணை இயக்குநர் பகவத் சிங்கிடம் பேசினோம், ``கேரளாவைத் தொடர்ந்து அண்டை மாநிலமான தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது தொடங்கியிருக்கிறோம். கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான்.
21 கால்நடை மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே கால்நடை மருத்துவர்கள் இருக்கிறார்கள். சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து கால்நடை மருத்துவர்களை நீலகிரிக்கு அனுப்பச் சொல்லி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம்" என்றார்.
Also Read: நீலகிரி குறும்பட திருவிழா: 32 நாடுகள்; 120 ஷார்ட் ஃபிலிம்கள்; களைகட்டிய ஊட்டி!
from தேசிய செய்திகள்
0 Comments