கர்நாடகா மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 16) நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரின் சர்ச்சைக்குரிய பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மாற்று கட்சி எம்.எல்.ஏ-க்கள் உட்பட சொந்த கட்சி எம்.எல்.ஏ-க்களையே முகம்சுழிக்கவைத்த அந்த பேச்சுக்கு, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டிருக்கிறார். இருப்பினும், அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
என்ன பேசினார் எம்.எல்.ஏ?
நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், மழை வெள்ள பாதிப்புகள், பயிர் சேதங்கள் குறித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள், ஆளும் பா.ஜ.க அரசிடம் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர். மேலும், கூட்டம் முடிவடையும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் சபை நேரத்தை மேலும் 1 மணி நேரம் நீட்டிக்கவேண்டும் எனவும் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு சபாநாயர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, ``எல்லோருக்கும் பேச நேரம் கொடுத்தால் சபை எப்படி நடத்துவது?'' என கேள்விகேட்டபடியே செய்வதறியாது குழம்பி தவித்தார்.
அப்போது இடைமறித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ரமேஷ் குமார், ``பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாவிட்டால், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஒரு பழமொழி சொல்வார்கள். சபாநாயகர் நீங்களும் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள்" என சிரித்தபடியே நக்கலாக கூறினார். அதற்கு சபாநாயகரும் சிரித்தபடியே ``உங்கள் அனுபவத்தை வரவேற்கிறேன்!" என பதிலளித்தார்.
இந்தச் சம்பவத்துக்கு, ``ஒரு மாநில சட்டமன்றத்தில், பாலியல் குறித்தும், பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் பேசி சிரித்திருப்பது மிகவும் கீழ்த்தரமான செயல்" என மாற்று கட்சி எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ-க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளவாசிகளும் இதுசம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு எம்.எல்.ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என கடுமையாக விமர்சித்தனர்.
மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ!
கடுமையான எதிர்ப்புகள் எழுந்தநிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர்.ரமேஷ் குமார் தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், ``பாலியல் வன்கொடுமை குறித்து நான் கூறிய விரும்பத்தகாத, அலட்சியக் கருத்துக்காக அனைவரிடமும், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் நோக்கம் கொடூரமான குற்றத்தை சிறுமைப்படுத்துவது அல்ல, இனிமேல் வார்த்தைகளில் கவனமாக இருப்பேன்" என பதிவிட்டிருக்கிறார்.
Also Read: பாஜக இருக்கட்டும்... தேர்தல் களத்தில் மம்தாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறது காங்கிரஸ்?
from தேசிய செய்திகள்
0 Comments