மேக்கேதாட்டூ: `ஆபத்து நெருங்குகிறது; தமிழக அரசு என்ன செய்கிறது?' - கொந்தளிக்கும் மணியரசன்

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் சட்ட விரோதமாக அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அங்கு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரும் பின்னடைவுகள் ஏற்படும் என்பதால் இங்குள்ள விவசாயிகளும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு காவிரி ஆணையத்தின் அனுமதியும் மத்திய அரசின் சூற்றுச்சூழல் வனத்துறையின் அனுமதியும் இன்னும் சில நாள்களில் கிடைத்துவிடும் என கர்நாடக ஆட்சியாளர்கள் வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்கள். இது தமிழக விவசாயிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவுக்குத் துணை போகும் மத்திய அரசின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்தவித முயற்சியுமே செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``கர்நாடக அரசு தனது எல்லையில் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டூ அணை கட்டி, தமிழ்நாட்டுக்கு வெள்ள நீர் கூட வராமல் தடுக்கும் வேலையில் தீவிரமாக உள்ளது. கர்நாடகத்தின் இந்த சட்ட விரோதச் செயலை பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய ஆட்சி ஊக்கப்படுத்தித் தூண்டி வருகிறது என்பதற்கான சான்று, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடந்த 22-ம் தேதி அன்று கர்நாடக சட்டப்பேரவையில் அறிவித்த செய்தியாகும்.

மேக்கேதாட்டூ

Also Read: விகடன் செய்தி : மேக்கேதாட்டூ விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!

மேக்கேத்தாட்டூ அணை கட்டுவதற்கு மத்திய அரசின் நீர்வளத்துறை ஏற்கெனவே அனுமதித்துவிட்டதாகவும், காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதிக்க உள்ளது என்று கடந்த 22-ம் தேதி அன்று கர்நாடக சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த பொம்மை, `மேக்கேத் தாட்டில் 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கு ஏற்கெனவே ஒன்றிய அரசின் நீர்வளத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதலைப் பெற முயன்று வருகிறோம். மேக்கேத்தாட்டூ அணையின் விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம். 27-ம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில் மேக்கேத்தாட்டூ அணைக்கு மேலாண்மை ஆணையம் அனுமதி அளிக்கும்; அதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது' என்று கூறினார்.

மேக்கேத்தாட்டூ அணை கட்டினால், தமிழ்நாட்டில் 26 லட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலை வனமாகிவிடும். சென்னை, ராமநாதபுரம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்குக் குடிநீர் கிடைக்காது.

மத்திய அரசின் துணையோடு மேக்கேத்தாட்டூ அணை கட்டுவதற்கு முயற்சிகள் கர்நாடகத்தில் நடக்கும்போது, இதைக் கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் அல்லது நீராற்றல் துறை அமைச்சர் உள்ளிட்டவர்கள் எந்தக் கருத்தும் கூறவில்லை, அறிக்கையும் வெளியிடவில்லை என்பது தமிழக விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றமளிக்கிறது.

நேற்று நடைபெறுவதாக இருந்த, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் அஜென்டாவில், மேக்கேத்தாட்டூ அணை அனுமதி குறித்து விவாதிக்கும் அம்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. (பின்னர் அக்கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது). காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு கூட்டத்திலும் செயலாக்கப் பொருள் நிரலில் (அஜண்டாவில்) மேக்கேத்தாட்டூ அணைக்கு அனுமதி வழங்கலை வைத்து வருகிறது.

பெ.மணியரசன்

ஏற்கெனவே பல கூட்டங்களில் மேக்கேத்தாட்டூ விவகாரத்தை பொருள் நிரலில் வைப்பதைத் தமிழ்நாட்டு அதிகாரிகள் எதிர்த்து, அது பொருள் நிரலில் விவாதிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. அப்போக்கை, தமிழ்நாடு அரசு கண்டனம் செய்ததில்லை. இப்போது மீண்டும் நேற்று நடைபெறுவதாக இருந்த கூட்டத்துக்கான பொருள் நிரலில் காவிரி மேலாண்மை ஆணையை அதிகாரிகள் சேர்த்திருப்பதிலிருந்தே, மோடி ஆட்சி, சட்ட விரோத உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விரோத மேக்கேத்தாட்டூக்கு அனுமதி கொடுப்பதில் தீவிரம் காட்டுகிறது என்ற உண்மை அம்பலமாகிறது.

மேக்கேத்தாட்டு அணை அனுமதியைப் பொருள் நிரலில் முன்வைத்தால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவைத் தமிழ்நாடு முதலமைச்சர் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். புதுச்சேரி, கேரள முதல்வர்களும் இவ்வாறு அறிவிக்குமாறு தமிழ்நாடு முதல்வர் வேண்டுகோள் வைக்க வேண்டும்.

Also Read: சுற்றுச்சூழல் பாதிக்குமென தெரிந்தும் அணை கட்ட துடிப்பது ஏன்? - மேக்கேதாட்டூ விவகாரம்

இந்நிலையில், மேக்கேத்தாட்டூ அணையைக் கட்டுவதற்கு ஏற்கெனவே நீர்வளத்துறையின் மூலம் அனுமதி கொடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்திலும் அதற்கான ஏற்பிசை கிடைப்பதற்கான பணிகளை மோடி ஆட்சி முனைந்து செய்து வருகிறது. பா.ஜ.க ஆட்சியின் இந்தத் தமிழன விரோதப் போக்கு நடவடிக்கைகளைக் கண்டித்தும், இதற்கு உரியவாறு எதிர்வினையாற்றி தமிழ்நாட்டுக் காவிரி நீரைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் - வரும் 2022 ஜனவரி 6-ம் தேதி அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தயிருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/3zc2lOz

Post a Comment

0 Comments