மகாராஷ்டிரா: 100 கோடி லஞ்சம்; முன்னாள் அமைச்சர் மீது 7,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் லஞ்ச புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பரம்பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். அனில் தேஷ்முக் போலீஸ் அதிகாரிகளிடம் மும்பையில் உள்ள பீர் பார்கள் மற்றும் ஓட்டல்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி அளவுக்கு மாமூல் வசூலித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் என்பவர் மூலம் இந்த மாமூல் பணத்தை அனில் தேஷ்முக் வசூலித்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தது. இதில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி அமலாக்கப்பிரிவு அனில் தேஷ்முக்குக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. இறுதியாக அவர் விசாரணைக்கு ஆஜராக வந்த நவம்பர் ஒன்றாம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அனில் தேஷ்முக்கை கைது செய்தனர்.

அனில் தேஷ்முக்

இதுவரை ஜாமீன் கூட கேட்காமல் தொடர்ந்து சிறையிலிருந்து வருகிறார். இந்த நிலையில், அமலாக்கப்பிரிவு அனில் தேஷ்முக்குக்கு எதிராக நடத்தி வரும் பணமோசடி வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. 7000 பக்கம் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிக்கையில் அனில் தேஷ்முக்கும், அவர் மகன்களும் பண மோசடிக்காக 27 கம்பெனிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்றும், லஞ்சப்பணத்தை ஹவாலா முறையில் டெல்லியில் உள்ள கம்பெனிக்கு அனுப்பி அங்கிருந்து நன்கொடையாக தங்கள் தொண்டு நிறுவனத்துக்குப் பெற்றிருக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் அனில் தேஷ்முக் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அனில் தேஷ்முக்கின் உதவியாளர்கள் சஞ்சீவ் பாலண்டே, குந்தன் ஷிண்டே உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 'மகாராஷ்டிரா: 100 கோடி மாமூல் விவகாரம்! - மாஜி அமைச்சர் அனில் தேஷ்முக் மீது அமலாக்கத்துறை வழக்கு'



from தேசிய செய்திகள் https://ift.tt/3FD7lyd

Post a Comment

0 Comments