மும்பை விமான நிலையத்துக்கு ஹாங்காங்கிலிருந்து வந்த இரண்டு பார்சல்களில் மெமரி கார்டுகள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அதன் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை சோதனை செய்து பார்த்த போது, உள்ளே விலை உயர்ந்த ஐபோன்கள் ஆயிரக்கணக்கில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்த ஐபோன் 13 மாடல்கள் அதிகமாக இருந்தது. அவற்றின் ஒவ்வொன்றின் ஆரம்ப கட்ட விலை ரூ.70 ஆயிரமாகும். சில போன்களின் விலை 1.80 லட்சமாகும். அவற்றை இந்தியாவிற்கு நேரடியாக இறக்குமதி செய்தால் மத்திய அரசுக்கு 44 சதவீதம் வரி கட்டவேண்டியிருக்கும். மொத்தம் 3,646 ஐபோன்களும், 12 கூகுள் பிக்சல் 6 புரோ போன்களும், ஒரு ஆப்பிள் வாட்சும்பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.42.86 கோடியாகும். சுங்க வரிச்சட்டத்தின் கீழ் அவை அனைத்தையும் வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பை வெறும் ரூ.80 லட்சம் என்று அவற்றை இறக்குமதி செய்தவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். இந்தியாவில் தற்போது ஐபோன் பயன்பாடு 15 சதவீதமாக இருக்கிறது. மத்திய அரசு இந்தியாவில் மொபைல் போன்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களை வலியுறுத்தி வருகின்றன. 2017-ம் ஆண்டு இந்தியாவில் ஐபோன் உற்பத்தி 5 சதவீதமாக இருந்தது. தற்போது அது 75 சதவிதமாக அதிகரித்துருக்கிறது. ஐபோன் 13 மாடல்கள் இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் இந்த அளவுக்கு அதிகமாக இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்டு இருப்பது இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யார் இந்த அளவுக்கு கடத்தி கொண்டு வந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள்
0 Comments