பிரியங்கா டு சந்திரசேகர் ஆசாத் - உ.பி தேர்தல் களத்தில் உதயமாகும் புதிய அரசியல் சக்திகள் யார் யார்?

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கிருக்கும் கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் தேர்தலைச் சந்திப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. `உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சிதான், நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும்' என்பது தேசியக் கட்சிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், எப்போதுமே உ.பி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும். அதிலும் இந்தமுறை உ.பி தேர்தலில் புதிய முகங்கள் பலரும் களம் காணவிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அலசுவதுதான் இந்தக் கட்டுரை!

பிரியங்கா காந்தி

இந்திய அரசியலுக்கு இவர் புதிய முகம் இல்லையென்றாலும், உ.பி அரசியல் களத்துக்கு இவர் புதிய முகம்தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, உ.பி தேர்தலுக்காகத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேசத்தில், தற்போது அந்தக் கட்சிக்கு வெறும் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். உ.பி-யில் கட்சியைப் பலப்படுத்துவதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரியங்கா காந்தியை உ.பி மாநில பொறுப்பாளராக நியமித்தது கட்சி மேலிடம். கடந்த சில மாதங்களாக உ.பி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நல்லுறவை வலுப்படுத்தும் வேலைகளைப் பிரியங்கா செய்துவருவதாகச் சொல்லப்படுகிறது.

பிரியங்கா காந்தி

Also Read: உ.பி:7 முனைப் போட்டி... சூடுபிடிக்கும் தேர்தல் களம்! - யோகிக்கு டஃப் கொடுக்கும் தலைவர்கள் யார் யார்?

முதற்கட்ட தேர்தல் பணியாக, உ.பியிலுள்ள முக்கியத் தொகுதிகளுக்குக் காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சென்று, மக்களிடம் குறைகளைக் கேட்டறிய வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார் பிரியங்கா. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மக்களை நேரில் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர். அடுத்ததாக உ.பி முழுவதும் 12,000 கி.மீ யாத்திரை செல்வதற்குத் திட்டமிட்டிருக்கிறார் பிரியங்கா.

சந்திரசேகர் ஆசாத்

தலித் மக்களின் உரிமைகளுக்காக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இயங்கிவரும் அமைப்பு `பீம் ஆர்மி'. இந்த அமைப்பைத் தோற்றுவித்தவர்தான் சந்திரசேகர் ஆசாத். 2015-ம் ஆண்டில் இந்த அமைப்பைத் தொடங்கிய அவர், 2020-ம் ஆண்டில் ஆசாத் சமாஜ் என்கிற அரசியல் கட்சியையும் தொடங்கினார்.

தலித் மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்ததன் காரணமாக, உ.பி அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக மாறியிருக்கிறார் சந்திரசேகர் ஆசாத். இது, ஏற்கெனவே உ.பி-யில் தலித் மக்களுக்கான அரசியல் கட்சியாகச் செயல்பட்டுவரும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது. 2021 பிப்ரவரியில் வெளியான `டைம்' இதழின், `வருங்காலத்துக்கான வளர்ந்து வரும் 100 தலைவர்கள்' பட்டியலில் ஆசாத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

சந்திரசேகர் ஆசாத்

2020 பீகார் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ஆசாத் சமாஜ் கட்சி, அதே ஆண்டில் உ.பி இடைத்தேர்தலில் புலந்த்ஷஹர் (Bulandshahr) தொகுதியிலும் போட்டியிட்டது. பீகார் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், உ.பி இடைத்தேர்தலில் சுமார் 13,000 வாக்குகளைப் பெற்று காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடம் பிடித்தது ஆசாத் சமாஜ் கட்சி.

``நாங்கள் பா.ஜ.க-வை எதிர்த்து இந்தத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறோம். வேலை, படிப்பு, சம உரிமை உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கும் இளைஞர்கள் அனைவரும் எங்கள் பக்கம் நிற்கிறார்கள்'' என்கிறார் ஆசாத். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசியைச் சந்தித்திருக்கிறார் சந்திரசேகர் ஆசாத். எனவே, இவர்கள் இருவரும் ஒன்றிணைந்துகூட உ.பி தேர்தலைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகாஷ் ஆனந்த்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் மருமகன்தான் ஆகாஷ் ஆனந்த். உ.பி-யில் சிறு சிறு தொழில்களைச் செய்துவரும் இவரை, கட்சியின் துணைத் தலைவராக அறிவித்தார் மாயாவதி. இதையடுத்து கட்சிக்குள்ளேயே வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு கிளம்ப, அந்தப் பதவியிலிருந்து ஆகாஷை நீக்கினார் மாயாவதி. அதன் பிறகு கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மட்டும் செயல்பட்டுவந்தார் அவர்.

சமீப காலமாக உ.பி தேர்தல் களத்தில் ஆகாஷ் ஆனந்தையே பகுஜன் சமாஜ் முன்னிறுத்தி வருகிறது. கட்சி விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் ஆகாஷ் தென்படுகிறார். தங்களுக்குப் போட்டியாக வந்திருக்கும் சந்திரசேகர் ஆசாத்தைச் சமாளிக்க, இளம் தலைவரான ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் முன்னிறுத்துவதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். உ.பி தேர்தலுக்கான பொறுப்புகள் பலவற்றையும் ஆகாஷ் ஆனந்த்திடம் மாயாவதி ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகாஷ் ஆனந்த்

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் மிஷ்ராவின் மகன் கபில் மிஷ்ராவும், மருமகன் பரேஷ் மிஷ்ராவும் சமீபத்திய கட்சி நிகழ்வுகளில் முன்னிறுத்தப்பட்டுவருகின்றனர். எனவே, இளைஞர்களை முன்னிறுத்தி எதிர்வரும் தேர்தலைச் சந்திக்க மாயாவதி திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஜெயந்த் செளத்ரி

ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் கொரோனா பாதிப்பால் கடந்த மே 6-ம் தேதியன்று உயிரிழந்தார். இவர், மன்மோகன் சிங், வாஜ்பாய், நரசிம்ம ராவ், வி.பி.சிங் எனப் பல பிரதமர்களின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். எப்போதும் விவசாயிகளின் பக்கம் நிற்கும் இவர், பா.ஜ.க அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்தவர். இவரது மகன்தான் ஜெயந்த் சிங் செளத்ரி. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி-யின் மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் ஜெயந்த். தந்தையின் மறைவுக்குப் பின்னர், ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு, உ.பி தேர்தல் களத்தைச் சந்திக்கவிருக்கிறார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அஜித் சிங்குக்கு இருக்கும் செல்வாக்கு வேறெந்த அரசியல் தலைவருக்கும் இல்லை. அந்தச் செல்வாக்கைச் சாதகமாக்கி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது ராஷ்டிரிய லோக் தளம்.

ஜெயந்த் செளத்ரி

Also Read: புதிரான புதின்; `தில்' வெற்றியா, `தில்லு முல்லு' வெற்றியா? - ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் சம்பவங்கள்!

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் ஜெயந்த், ``இந்தத் தேர்தலில் பசு வதை, லவ் ஜிகாத் உள்ளிட்ட பிரச்னைகளை வைத்து அரசியல் செய்வது எடுபடாது; மாறாகக் கல்வி, சுகாதாரம், வேளாண் சட்டங்களை எதிர்த்து நிற்கும் விவசாயிகளின் பிரச்னைகள் ஆகியவைதான் முக்கியத்துவம் பெறும்'' என்றிருக்கிறார்.

நாளுக்கு நாள் புதிய அரசியல் முகங்கள் உதயமாகிக் கொண்டிருப்பதால், உ.பி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது!


from தேசிய செய்திகள் https://ift.tt/2Y4txAy

Post a Comment

0 Comments