கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் தலைநகரான திருவனந்தபுரத்தை பா.ஜ.க கைப்பற்றியது. இதற்கிடையே பா.ஜ.க தலைமை தன்னை தொடர்ந்து ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாட்டி வந்த கேரளத்தின் முதல் பெண் டி.ஜி.பி-யான ஆர். ஸ்ரீலேகா, திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். சாஸ்தமங்கலம் வார்டு கவுன்சிலரான ஸ்ரீலேகா, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மேயரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக இப்பதவியை ராஜினாமா செய்வதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி செயலரிடம் அடுத்தகட்டமாக கடிதம் அளிக்க உள்ளதாகவும் தனது வார்டு வாக்காளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார். எனினும், சிறிது நேரத்திலேயே அந்த வாட்ஸ்அப் பதிவை அவர் நீக்கியுள்ளார். சுயேச்சையின் ஆதரவுடன் குறைந்த பெரும்பான்மையில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க-வுக்கு இந்த விவகாரம் பெரும் பின்னடைவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 101 வார்டுகளைக் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க கூட்டணி வசம் 50 இடங்கள் உள்ளன. இதில் கவுன்சிலர் ஆர்.சுகதன் குண்டர் சட்டத்தில் கைதாகி தற்போது சிறையில் உள்ளார். ஸ்ரீலேகாவும் ராஜினாமா செய்தால், பாஜகவின் பலம் குறையும். இதனால் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், நீண்ட போராட்டத்திற்குப் பின் பா.ஜ.க கைப்பற்றிய தலைநகர் மாநகராட்சி ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு 29 இடங்களும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 20 இடங்களும் உள்ளன. மற்ற இருவர் சுயேச்சைகள் ஆவர்.

மாநகராட்சித் தேர்தலின்போது ஸ்ரீலேகாவுக்கு மேயர் பதவி தருவதாகக் கூறி சாஸ்தமங்கலம் வார்டில் பா.ஜ.க போட்டியிட வைத்தது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததும் வி.வி.ராஜேஷ் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, வட்டியூர்க்காவு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீலேகா மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் தமக்கு வாக்கு சேகரிக்கவில்லை என அவர் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அண்மையில் அவருக்குத் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த ஸ்ரீலேகா, கவுன்சிலர் பதவியை மட்டுமின்றி பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பொறுப்பையும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் விலகினால் ஆறு மாதங்களுக்குள் பா.ஜ.க அங்கு இடைத்தேர்தலையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

விதிமுறைகளின்படி கவுன்சிலர்கள் மாநகராட்சி செயலாளரிடமே அதிகாரபூர்வமாக ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்க வேண்டும். ஸ்ரீலேகா இன்னும் செயலாளரிடம் கடிதம் கொடுக்காததை சாதகமாகக் கொண்டு, பா.ஜ.க-வின் மத்திய, மாநிலத் தலைமைகள் மற்றும் மேயர் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று டில்லியில் இருந்து ஸ்ரீலேகாவுடன் தொலைபேசியில் பேசி சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். மேலும் திருவனந்தபுரம் வந்தடைந்து அவரிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ராஜீவ் சந்திரசேகரின் தொலைபேசி அழைப்புக்குப் பின்னரே ஸ்ரீலேகா தனது வாட்ஸ்அப் பதிவை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து மேயர் வி.வி.ராஜேஷ் கூறுகையில், "ஸ்ரீலேகாவின் இந்த முடிவால் மாநகராட்சி நிர்வாகத்திற்கோ பா.ஜ.க ஆட்சிக்கோ எவ்வித நெருக்கடியும் ஏற்படாது. அவர் விலகுவதாகக் கூறுவது முற்றிலும் அவரது தனிப்பட்ட காரணங்களே தவிர அரசியல் காரணங்கள் அல்ல. இந்தக் குழப்பத்தை கட்சித் தலைமை உடனடியாகத் தலையிட்டு சுமுகமாகத் தீர்த்துவைக்கும்" என்றார்.
from India News https://ift.tt/tA8OJab
0 Comments