கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருக்கு, அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் விஜய் வழங்கியதைத் தொடர்ந்து, ‘கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறார் முதல்வர்’ என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
முன்னதாக முதல்வர் விஜய்யின் கரூர் விஜயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடையீட்டு மனுவும் தள்ளுபடியாகியிருக்கிறது.
இந்தச் சூழலில், நடப்பு அரசியல் கேள்விகளோடு தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமனைச் சந்தித்தோம்...

“தி.மு.க கூட்டயிணிலிருந்து வெளியேறி த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்துள்ள கட்சிகளை ‘நம்பிக்கைத் துரோகிகள்’ எனத் தொடர்ந்து தி.மு.க-வினர் விமர்சித்துக் கொண்டே இருப்பது சரிதானா?”
“எந்தவொரு அரசியல் கட்சியும், மற்றொரு கட்சியை விமர்சிக்கக்கூடாது என்றில்லை. விமர்சனத்தின் பின்னணியில் உள்ள தேவையையும் நோக்கத்தையும்தான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.”
“தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை என தி.மு.க-வினர் தொடர்ந்து மறுத்துவரும் சூழலில், ‘அப்படியொரு ஆலோசனையை நான் ஆரம்பகட்டத்திலேயே மறுத்துவிட்டேன்’ எனத் திருமாவளவன் மீண்டும் கூறியிருக்கிறாரே?”
“ஏற்கெனவே இதுகுறித்து திருமாவளவன் பொதுவெளியில் தெளிவான பதில் சொல்லியிருக்கிறார். அதையேதான் இப்போதும் கூறியிருக்கிறார். அதாவது, தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி குறித்து தி.மு.க தலைவர் பேசினார் என எந்தவொரு இடத்திலும் திருமாவளவன் குறிப்பிடவில்லை.
‘அங்கிருந்து பேசப்பட்டது, சொல்லப்பட்டது, சுற்றியிருந்தவர்கள் கருத்து சொன்னார்கள்’ என்று தனக்கு நடந்ததைத் தெளிவாக அவர் சொல்லிவிட்டார். இதை த.வெ.க-வினர்தான் தங்களுக்கு வசதியாக ஒரு நரேட்டிவ் செட் செய்து ஊடகம் மூலம் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
மற்றபடி இரண்டு மாதங்களைக் கடந்துவிட்ட த.வெ.க ஆட்சியில் சொல்லிக்கொள்ளுமளவு என்ன சாதனை செய்துவிட்டார்கள்?”

“700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டார்கள்தானே?”
“எங்கே மூடினார்கள்? மூடப்பட்ட கடைகள் குறித்த முழு விவரங்களையும் இதுவரை அந்தத் துறையின் அமைச்சரும் சொல்லவில்லை; அதுகுறித்த செய்திக்குறிப்பும் வெளியாகவில்லையே.”
“வி.சி.க குறித்து ஆ.ராசா தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில், ‘நாங்கள் திருப்பியடித்தால் தாங்கமாட்டீர்கள்’ என அமைச்சர் வன்னியரசு பதிலடி கொடுத்திருக்கிறாரே?”
“அது ஏற்கெனவே முடிந்துபோன விஷயம். தெருவில் நடந்துபோகிறபோது யாராவது தெரியாமல் காலில் மிதித்துவிட்டால் அதற்காக திரும்ப ரியாக்ட் செய்யவேண்டிய தேவையில்லை. அது அத்தோடு முடிந்துபோச்சு. அவ்வளவுதான்”
“குதிரைப்பேர குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பியை போலீஸார் தேடி வருகையில், போலீஸ் முன் ஆஜராகி குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்காமல், தலைமறைவாக இருந்து முன் ஜாமீன் வாங்கவேண்டிய அவசியம் என்ன?”
“குற்றமே செய்யாத சூழலிலும் போலீஸ் உங்களைத் தேடுகிறது எனும்போது, சட்ட ரீதியான பாதுகாப்பைத் தயார் செய்துவிட்டுத்தான் அந்த விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில், ‘நாம் குற்றமே செய்யவில்லை’ என்பது நம்மைத் தேடுகிற காவல்துறையினருக்கும்கூட தெரியும். ஆனால், நம்மைப் பிடித்து விசாரணை என்ற பெயரில், அரசியல் ரீதியான பழிவாங்குதலுக்கு உள்ளாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.
ஆக, அரசியல் உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பொறிக்குள் நாமே ஏன் போய் விழ வேண்டும்? அதனால்தான் முன் ஜாமீன் வாங்குகிற வரையில் தலைமறைவாக இருந்தார்கள். அதேசமயம் இப்படி முன் ஜாமீன் வாங்குவதாலேயே ‘குற்றவாளி’, ‘பயந்துவிட்டார்கள்’ என்றெல்லாம் அர்த்தம் கிடையாது.”
“அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது நீங்கள்கூட ‘அமைச்சர் நிர்மல்குமார்தான் ஒரு ஃபோர் ட்வென்ட்டி’ என்று குற்றம் சாட்டியிருந்தீர்கள். எந்த அடிப்படையில் ஓர் அமைச்சரை இப்படி குற்றம் சாட்டுகிறீர்கள்?”
“உசிலம்பட்டியைச் சேர்ந்த உக்கிரபாண்டி என்பவரது இடத்தை அமைச்சர் நிர்மல்குமாரும் அவர் தரப்பினரும் ஆக்கிரமித்திருப்பதோடு, கல்யாண மண்டபம் ஒன்றையும் அதில் விதிமுறை மீறி கட்டியிருக்கின்றனர். இதுகுறித்த புகார் அவர் மீது இருக்கிறது எனும்போது அவர் ஃபோர் ட்வென்ட்டிதானே!”

“ ‘தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என மூன்று கட்சிகளும் ஒரே நாளில் ஆளுநரைச் சந்தித்துப் புகார் கொடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என்கிறாரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்?”
“இதுதான் நரேட்டிவ். ஐயா பெ.சண்முகத்துக்கு நடைமுறை புரியாததெல்லாம் ஒன்றுமில்லை. இது பெ.சண்முகம் ஐயா கருத்தே அல்ல. ‘இந்த மாதிரியான கேள்விக்கு நீங்கள் இப்படியொரு பதில் சொல்லுங்கள்’ என த.வெ.க தரப்பு கொடுத்த நரேட்டிவ் செய்தி இது.
ஆளுநர் அர்லேகர், தமிழ்நாட்டுக்கு மட்டுமானவரல்ல. கேரளாவுக்கும் அவர்தான் ஆளுநர் என்கிறபோது, தமிழ்நாட்டுக்கு அவர் எப்போது வருகிறாரோ அப்போதுதான் ஒட்டுமொத்த பேருக்கும் அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள். கடந்த ஜூன் 30-ம் தேதியே ஆளுநர் அப்பாயின்மென்ட் கேட்டு நாங்கள் மின்னஞ்சல் செய்துவிட்டோம்.
மறுநாள் காலை ஆளுநரின் செயலரை நேரிலும் சந்தித்துக் கேட்டபோது, ‘இன்று இரவு ஆளுநர் சென்னை வருகிறார். உங்களுக்கான அப்பாயின்மென்ட்டை உறுதிசெய்கிறேன்’ எனக்கூறி நேரம் கொடுத்தார்கள். அந்த நாளில்தான் மூன்று கட்சிகளுக்குமே ஆளுநர் அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறார்.
நாங்கள் ஆளுநரைச் சந்தித்துக் கோரிக்கையைக் கொடுத்துவிட்டு வெளியில் வரும்போதுதான், வெயிட்டிங் ஹாலில் அ.தி.மு.க-வும் ஆளுநரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தது எங்களுக்குத் தெரியவந்தது.
இந்த உண்மையெல்லாம் பெ.சண்முகம் போன்ற மூத்த தலைவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அன்றைய தினம் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான த.வெ.க-வின் நரேட்டிவ் இதுதான் என்பதால் அப்படிச் சொல்லியிருக்கிறார்.
த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவித்துவருகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், த.வெ.க-வினர் எழுதிக் கொடுக்கிற ஸ்க்ரிப்ட்டுக்கு வாயசைத்து வருகிறார். ஆனால், த.வெ.க அரசு குதிரைப்பேரம் நடத்துகிறது என்று அவரது மனசாட்சிக்கு நன்றாகத் தெரியும்.
பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில் குதிரைப்பேரம் நடக்கிறபோது, அதை எதிர்த்துக் குரல் எழுப்புகிற கம்யூனிஸ்ட்டுகள், தமிழகத்தில் மட்டும் அமைதி காத்துவருகிறார்கள். கம்யூனிஸம் என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுமா என்ன? எனவே, எதிர்க்கட்சிகளைப் பார்த்து கேள்வி எழுப்புகிற தோழர், ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகவும் கேள்வி எழுப்ப வேண்டும்!”
“அப்படியென்றால், கடந்தகாலத்தில் தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தபோதும் கம்யூனிஸ்டுகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் இருந்தார்களா?”
“கடந்தகாலத்தில், தி.மு.க அரசு கொண்டுவந்த தொழிலாளர் சட்ட மசோதா, வேங்கை வயல் உள்ளிட்ட விவகாரங்களில் கம்யூனிஸ்டுகளும் வி.சி.க-வினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மசோதாவையே வாபஸ் வாங்கச் செய்திருக்கின்றனர். ஆனால், இப்போது இப்படி மாறிவிட்டனர்.

“கரூர் சம்பவத்துக்கு தி.மு.க-வினரும் காவல்துறையும்தான் காரணம் என த.வெ.க தரப்பில் தொடர்ச்சியாக குற்றம் சாட்டுகிறார்களே?”
“‘போலீஸை வைத்துக் கொன்று குவித்த தி.மு.க’ என எங்கள் கட்சித் தலைவர்கள் மீதே குற்றம் சாட்டுகின்றனர். போலீஸாரையும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குகின்றனர் என்பதுதான் இதில் முக்கிய அம்சம். அன்றைக்கு கரூர் சம்பவத்துக்கு உச்ச நீதிமன்றத்தால் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த அஸ்ரா கர்க்தான் இப்போதும் காவல்துறையின் உயர் அதிகாரியாக இருக்கிறார்.
காவல்துறையும் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அப்படியிருந்தும் அரசியலுக்காக இதுபோன்ற பொய்களை த.வெ.க-வினர் தொடர்ந்து சொல்லிவருகின்றனர்.”
from India News https://ift.tt/6KJ20TO
0 Comments