"தவெகவுடன் அதிமுக இணையும் என்று இனியும் பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தவெகவில் தொடர்ந்து இணைந்து கொண்டிருக்கும் நிலையில், தவெக-வில் அதிமுக இணையும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இது அதிமுக-வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, "ஆதவ் அர்ஜுனா போல் கொள்கையின்றி பல கட்சிகளுக்கு ஓடுபவர்கள் அதிமுகவினர் கிடையாது. திமுக, விசிக, தவெக என வாய்ப்பு கிடைக்கும் இடத்துக்கு ஓடுகாலியாக சென்றவர்தான் ஆதவ் அர்ஜுனா. அவருக்கென்று கொள்கை கிடையாது.

தவெகவுடன் அதிமுக இணையும் என இனியும் பேசி வந்தால் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன். லெட்டர்பேடை வைத்து ஏமாற்றும் கூட்டம்தான் அங்கே சென்றுள்ளது. 31 ஆண்டுக்காலம் அதிமுக கொண்டு வந்த திட்டஙகளால்தான் தமிழகம் இன்று முதன்மை மாநிலமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த இயக்கத்துக்கு இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளனர்.
அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பனையூர் கேட்டின் முன் நின்றுகொண்டு கேட் எப்போ திறக்கும் என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு கேட் திறந்ததும் பட்டியிலிருந்து ஓடும் ஆட்டுக்கூட்டம்போல ஓடுகிறார்கள். அப்படி ஓடியும் அவர்கள் பார்ப்பது புஸ்சி ஆனந்தைத்தான். அந்த கட்சித் தலைவரின் திருமுகத்தை இன்றுவரை பார்க்க முடியவில்லை,
திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் எங்களுடன் இருந்த சிலருக்கு அங்கே நுழைய முடியாது. அங்கே அமைச்சர் பதவி கிடைக்காது, ஆனால், தவெக தொண்டர்கள் இல்லாத கட்சி, ரசிகர் மன்றம் போன்ற கட்சி என்பதால் அங்கே போய் பதவியை பிடித்துக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்கு மரியாதை இல்லை. அவர்கள் ஜாம்பவான்கள் கிடையாது, சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், ஓடுகாலிகள். ஆதவ் அர்ஜுனாவுக்கும் விஜயபாஸ்கருக்கும் வித்தியாசம் கிடையாது. ஆனால், உண்மையான தொண்டன் போக மாட்டான். ஒவ்வொரு அதிமுக தொண்டரும் ஜாம்பவான்தான். அந்த தொண்டனால் உருவாக்கப்பட்டவர்கள்தான் இந்த ஓடுகாலிகள். ஆனால், ஜாம்பாவன்கள் எல்லோரும் அதிமுகவில்தான் உள்ளார்கள்.
கரூர் சம்பவத்தில் ஒரு கணக்கு இருக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா பேசி வருகிறார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் கண்காணப்பில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆட்சியில் அமைச்சராக இருந்துகொண்டு காவல்துறையினரை மிரட்டி வழக்கை நீர்த்துப்போக செய்யலாம் என முயற்ச்சி செய்கிறார்.
தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு எல்லா கட்சிகளையும் உடைக்க பார்க்கிறது. அதனால்தான் நியாயம் கேட்டு ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்கள். குதிரை பேரத்தை வைகோவே வெளிப்படையாக கூறிவிட்டார்.

போதை மாத்திரை பயன்படுதியதாக தவெக அமைச்சர் மீதும், எம்எல்ஏ மீது பல்வேறு புகார்கள் எழுந்தபோதும் நடவடிக்கை எடுக்காத முதல்வர், ஜனநாயகப்படி விமர்சனம் செய்த எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார், இது பழிவாங்கும் நடவடிக்கை.
முதல்வர் விஜய் சினிமா போன்று அமைச்சரவையில் தனக்கு வேண்டியவர்களை உட்கார வைப்பது தவறான முன்னுதாரணமாகும் . அவர் பதவி பிரமாணம் எடுத்ததையே மீறுகிறார். இதையெல்லாம் யார் அவரிடத்தில் சொல்வது?
அரசு தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள சரியாக செயல்படவில்லை என்றால் தன்னிடம் மனு வழங்குங்கள் என்று ஆளுநர் கூறுவதில் தவறில்லை. எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது எந்த நேரத்திலும் அவர்களை சந்தித்து பேசும் நிலை இருந்தது. ஆனால், முதல்வர் விஜய்யை மாலை 5 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை. அப்படிப்பட்ட முதல்வரைத்தான் தேர்வு செய்திருக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும்போது விஜய்யின் நடவடிக்கையால் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது" என்றார்.
from India News https://ift.tt/ruM2oY7
0 Comments