`ஒரே அடியாக...' - ரூ.993 உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை!

அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து வரும் மோதல்போக்கு காரணமாக, வணிக ரீதியிலான எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விலையில் சராசரியாக ரூ. 993 உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மே 1, 2026, வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவதற்கு முன்புவரை 'எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்தப்போவதில்லை' என மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து கூறிவந்த நிலையில், ஏப்ரல் 29-ம் தேதி, தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு, இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்

இந்த விலை உயர்வின் அடிப்படையில் டெல்லியில் ஒரு வணிக எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை தற்போது ரூ. 3,071.50 ஆக உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது. டெல்லியில் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை ரூ. 913 ஆகத் தொடர்கிறது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி விலைகளை மறு ஆய்வு செய்து மாற்றியமைக்கின்றன. மேற்கு ஆசியாவில் தொடர்ந்து வரும் மோதலின் காரணமாக, வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்களின் விலைகள் கடைசியாக ஏப்ரல் மாதத்தில் மாற்றியமைக்கப்பட்டன. எனவே, மே மாதத்தில் விலை உயர்வு இருக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

கடந்த மாதம், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ. 60 உயர்த்தி, மார்ச் 7-ம் தேதி ரூ. 114.5 என விலை நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் பெருநகரங்கள் முழுவதும் 19 கிலோ எடையுள்ள வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை மேலும் ரூ. 196 உயர்ந்தது. உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுப் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் ஒரு முக்கியப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' (Strait of Hormuz) மூடப்பட்டதே திடீர் விலை உயர்வுக்குக் காரணம் என விளக்கமளிக்கப்படுகிறது.

கள்ளச்சந்தை விற்பனை மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளின் காரணமாக, நாடு முழுவதும் மக்கள் எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுவதற்குப் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்; இதனால் இந்தியா ஏற்கனவே எல்பிஜி விநியோகத்தில் கடும் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.



from India News https://ift.tt/hTdix6a

Post a Comment

0 Comments