TVK: ``100-க்கும் மேற்பட்ட ரெளடிகள் அராஜகத் தாக்குதல்" - தவெக தலைவர் விஜய் காட்டமான பதிவு!

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க சார்பில் விஜய் உள்பட டாப் தலைவர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெக ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

TVK Vijay
TVK Vijay

இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/khFBLqp

Post a Comment

0 Comments