பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வரும் நிலையில், "ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு ஆகிய இரண்டு ஆவணங்களையும் வாக்காளர் தகுதிக்கான சான்றுகளாக கருத முடியாது" என உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 326-ல் குறிப்பிட்டுள்ள தகுதிகளை ஆதார் மற்றும் ரேஷன் அட்டை ஆகிய இரண்டு ஆவணங்களும் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதால், அவற்றை சான்றாவணமாக கருத இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் வாக்காளர் பட்டியல் வழக்கில் விளக்கம் தெரிவித்த தேர்தல் ஆணையம், "ஆதார் என்பது ஒரு நபரின் அடையாளச் சான்றாக மட்டுமே இருக்கிறது. ஏதாவது திட்டத்தால் பயன்பெறுவதற்கு ஆதார் அட்டையை அடையாளமாக பயன்படுத்தலாம். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 326 இன் படி, ஒருவர் தகுதியைச் சரிபார்க்க ஆதாரை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் உள்ளன.
மேலும், கணக்கீட்டுப் படிவத்தில் வழங்கப்பட்ட 11 ஆவணங்களின் பட்டியலில் ஆதார் சேர்க்கப்படவில்லை. ஆதாரை பயன்படுத்தி அடையாளத்தை நிரூபிக்க இயலும். ஆனால், ஆதாரை வைத்து ஒருவர் குடியுரிமையை உறுதிப்படுத்த இயலாது.
பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950இன் பிரிவு 23(4) இன் படி குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டும் அடையாளமாக பயன்படுத்த ஆதார் எண்களையும் தேர்தல் ஆணையம் சேகரித்து வருகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அதிகாரிகளால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. போலி மற்றும் தற்காலிக ரேஷன் அட்டைகளும் ஆங்காங்கே புழக்கத்தில் உள்ள காரணத்தால், ரேஷன் கார்டுகளின் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது.
கணக்கீட்டுப் படிவத்தில் வழங்கப்பட்ட 11 ஆவணங்களின் பட்டியலில் ரேஷன் கார்டுகளும் இல்லை. ஆகவே ரேஷன் கார்டுகளையும் முக்கிய சான்றாவணமாக கருத இயலாது.
ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை துணை சான்று ஆவணங்களாக மட்டுமே பயன்படுத்த முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இணைப்பதற்கு முக்கிய சான்றாவணமாக ஆதார் மற்றும் ரேஷன் அட்டை ஆகிய ஆவணங்களை பயன்படுத்த இயலாது. வாக்காளர் பட்டியலிலிருந்து தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபட்டுவிட கூடாது என்பதை உறுதி செய்வே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
from India News https://ift.tt/6vawgit
0 Comments