”நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” – மாணிக்கம் தாகூர் எம்.பி கேள்வி

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய ஒரு மாணவரின் தந்தை “கல்விக்காக பல உதவிகளைச் செய்து வரும் த.வெ.க தலைவர் விஜய்யை ’இளம் காமராஜர்’ என்று அழைக்கலாம்” எனப் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு அந்த அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

கார்த்தி சிதம்பரம்

இதனையடுத்து விஜய்யை காமரஜருடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.  ”காமராஜரின் சரித்திரம், பெருமை,தகுதி பற்றி சரியான புரிதல் இல்லாதவர்களே இப்படி நினைக்கிறார்கள்” என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.  

அதேபோல விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த விருதுநகர் மக்களவைத்தொகுதியின் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ”பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர்தான், அவரைப் போல் யாரும் வர முடியாது. ’இரண்டாம் காமராஜர்’ மற்றும் ’இளம் காமராஜர்’ என யாரையும் கூற முடியாது. எனவே மிகைப்படுத்தி பெருந்தலைவருடன் ஒப்பிட்டு நடிகர் விஜய் உட்பட யாரையும் பேசுவது என்பது சரியாக இருக்காது.  

மாணிக்கம் தாகூர்

எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வரும் சமயத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்வார்கள். ஆனால் பாஜகவுக்கு மட்டுமே தேர்தலில் தோல்வி அடையும் மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை தான் அவர்களுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.” என்றார்.



from India News https://ift.tt/V8IvJLj

Post a Comment

0 Comments