"எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்..." - ஆர்.பி.உதயகுமார்

"எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்தினரையும் பதை பதைக்க வைத்துள்ளது..." என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதற்றத்தோடு மக்கள் மத்தியில் இந்த கருத்தை பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 8 கோடி தமிழர்களின் பாதுகாப்பு அரணாகவும், உலகத் தமிழர்களின் ஒரே நம்பிக்கையாகவும், விவசாய குடும்பத்தில் பிறந்து, முதல்வராக நல்லாட்சி நடத்தி சரித்திரம் படைத்த எடப்பாடி பழனிசாமி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்நாட்டு மக்களுக்காக இரவு பகல் பாராது உழைத்து வருகின்றார்.

அதிமுக-வின் நிரந்தர பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொக்கிஷமாக, பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அவருடைய சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது நம்மை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழ் இனத்தினரையும் பதை பதைக்க வைத்துள்ளது.

இசட் பிளஸ் பாதுகாப்பு

இது முதல் முறை அல்ல, ஏற்கனவே இது போன்ற மிரட்டல் கடிதங்கள் தொடர்ந்து வந்துள்ளது. இதை இந்த அரசு தொடர்ந்து வேடிக்கை பார்க்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவையாக கொண்டு, மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை வழிகாட்டியாகவும் கொண்டு மக்களுக்காக உழைத்து வருகின்ற எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு குறித்து மத்திய மாநில அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும்.

பொது வாழ்க்கையில் எந்த மிரட்டலுக்கும் எடப்பாடி பழனிசாமி அஞ்சுபவர் அல்ல. ஏற்கனவே ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிற நிலையில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என 2 கோடி கழக தொண்டர்கள் சார்பாக அரசின் கவனத்திற்கு கொண்டுவர நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

எடப்பாடி பழனிசாமியை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும், ஆகவே மத்திய மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.



from India News https://ift.tt/YBUofVt

Post a Comment

0 Comments