நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை, 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரசு தலையிடுவதாகவும், அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கான யுக்தி இது' என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பியிருந்தனர். இஸ்லாமிய, சிறுபான்மையின அமைப்புகள் நாடு முழுவதும் இந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தன.
இந்தக் கடும் எதிர்ப்புகள் மற்றும் சிறுபான்மையினரின் போராட்டங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று முதல் சட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது.
இந்த 2025 வக்ஃப் திருத்த மசோதாவில் கொண்டுவரப்பட்டிருக்கும் முக்கியத் திருத்தங்கள்:
* நன்கொடை வழங்குபவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.
* மத்திய வக்ஃப் கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்களில் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். வக்ஃப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் நீக்கப்படுகிறது.
* தீர்ப்பாயங்களின் முடிவை எதிர்த்து 90 நாள்களுக்குள் உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யலாம்.
* இந்தச் சட்டத்தின் பிரிவு 107-ஐ நீக்கி வரம்பு சட்டம் 1963 ( Limitation Act, 1963)-ஐ இதற்குள் கொண்டுவரப்படுகிறது. இந்த வரம்பு சட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு சட்டரீதியான தடையை விதிக்கிறது.
* வக்ஃப் சொத்துக்களை ஆய்வுசெய்ய, குறிப்பாக அரசுக்கு சொந்தமானது என்ற சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்துக்களை ஆய்வுசெய்ய கணக்கெடுப்பு ஆணையர்கள் மற்றும் கூடுதல் ஆணையர்களால் அங்கீகரிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அதற்கு மேல் அந்தஸ்திலுள்ள மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இது தொடர்பான முடிவுகளில் தீர்பாயங்களுக்குப் பதில் இந்த மூத்த ஆதிகாரிகளே இறுதி முடிவெடுப்பவர்களாக இருப்பர்.
* வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் சட்டம் இயற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள் நியமிக்கப்பட்ட போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். வக்ஃப் நிர்வாகிகள் முறையான காரணம் கோரி விண்ணப்பித்தால் கூடுதல் அவகாசம் வழங்கப்படும். இல்லையென்றால் கால அவகாசம் மறுக்கப்படும்.
* வக்ஃப் சொத்துக்களை தணிக்கை செய்ய இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் நடத்த உத்தரவிட மத்திய அரசுக்கு அதிகாரம். வக்ஃப் கணக்குகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருந்த நிலையில், அந்த உரிமை பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
* வக்ஃப் தீர்ப்பாயத்தில் முஸ்லிம் சட்ட நிபுணர் நீக்கப்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தலைவராகவும், மாநில அரசிலிருந்து இணைச் செயலாளரும் சேர்க்கப்படுவர்.
வக்ஃப் திருத்த மசோதா பற்றிய விரிவாகத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்
Waqf: வக்ஃப் திருத்த மசோதா என்றால் என்ன? அதன் நோக்கம்? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?| Explainer
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
from India News https://ift.tt/dAsj8Xx
0 Comments