"இல்லாத மக்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு, உழைத்து கொடுக்கும் ஏழைகளுக்கு பாடுபடும் இயக்கஙகள் மலர்ச்சி பெற வேண்டும்." என்று பட்டிமன்ற நடுவரும், மூத்த தமிழறிஞருமான சாலமன் பாப்பையா பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 -வது அகில இந்திய மாநாடு எப்ரல் 2 முதல் 6 வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேசும்போது, "கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 75 ஆண்டுகளாக மதுரை மண்ணில் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வு, முன்னேற்றத்திற்கு நடத்திய பல போராட்டங்களை நேரில் கண்டவன் என்கிற வகையில், இந்த அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1945 முதல் பொதுவுடமை இயக்கம் எனக்கு பழக்கமானதுதான். அப்போது ஹார்வி மில்லில் என் அப்பா மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளராக இருந்தார். அங்கு வேலை பார்த்த 15 ஆயிரம் தொழிலாளர்களின் மரியாதைக்காகவும், உரிமைக்காகவும் பாடுபட்ட இயக்கம் கம்யூனிச இயக்கம். அவர்கள்தாம் ஏழைத் தொழிலாளர்களை எழுச்சி பெற வைத்தனர்.
திரையரங்குளில் படம் பார்க்க டிக்கெட் வாங்க அப்போது எல்லோரிடமும் காசு இருக்காது. அதனால் ஏழைகள் பொழுது போக்க வேறு வழியிருக்காது. அதனால் எங்கள் பகுதியில் தொடர்ந்து நடக்கும் பொதுவுடமைக் கட்சி கூட்டஙகளுக்கு செல்வோம்.
சிறையிலிருந்து விடுதலையாகி பி.ராமமூர்த்தியும், சங்கரய்யாவும் திலகர்திடலில் பேசுவதை 11 வயதில் கேட்டேன். அவர்கள் பேசுவது அந்த வயதில் புரியாது, ஆனாலும் இடைவிடாமல் கேட்போம்.

1962-ல் பாரதி குறித்து தோழர் ஜீவாவின் பேச்சை கேட்டிருக்கிறேன். ஜானகி அம்மாள் பேச்சை கேட்டிருக்கிறேன். அதன் பிறகு கலை இலக்கிய பெருமன்றத்தில் எனக்கு முதல் மேடை கிடைத்தது. அதன் மூலம் பல ஊர்களில் பேசச் சென்றேன். ஆவேசமாக உணர்ச்சியுடன் எழுச்சி ஏற்படுத்தும்படி கம்யூனிஸ்டுகளின் பேச்சு இருந்தது, கஞ்சிக்கு இல்லாததால் காலம் வரும் என்று எதிர்பார்த்திருந்தோம்.
கீழடி பெருமையான விஷயம்தான் நமக்கு. செழிப்பான நகரில் வணிகப்பெருமக்கள் வியாபரம் செய்து வாழ்ந்த அதே இடத்தில்தான் ஏழை குடிமக்களும் வாழ்ந்திருப்பார்கள். இப்போதும் அதுபோல வாழும் மக்களின் வாழ்வு மேம்பட பொதுவுடமை இயக்கம் வளர வேண்டும்.
சோவியத் யூனியன், செஞ்சீனம் எழுச்சிபெற்று உருவான போது ஹங்கேரி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா, பல்கேரியா, யுகோஸ்லோவியா போன்ற நாடுகள் இருந்த நிலையை திரும்பி பார்க்கிறேன்.

இல்லாத மக்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு, உழைத்து கொடுக்கும் ஏழைகளுக்கு பாடுபடும் இயக்கங்கள் மலர்ச்சி பெற வேண்டும். இனி இந்த மண்ணில் கம்யூனிச இயக்கங்கள் ஒன்றுபடுவது மட்டுமல்ல, பெரியார் இயக்கமும், அம்பேத்கர் இயக்கமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் இந்த மண் செழிக்கும். தனித்துப்போராடி பலனில்லை. இந்தக்காலம் மிக கடுமையானதாக பல கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் என் கருத்தை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

from India News https://ift.tt/63tC9un
0 Comments