`அரசியலமைப்பு தான் அனைத்திற்கும் பிரதானம்..!' - துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா கண்டனம்

"அரசியல் சாசனப் பிரிவு 142, ஜனநாயக சக்தியின் மீது நீதித்துறை தொடுக்கும் அணு ஏவுகணையாக மாறிவிட்டது. இது 24x7 செயல்பட்டு வருகிறது. ஒரு ஜனாதிபதியை உத்தரவிடும் சூழ்நிலையை நாம் ஏற்றுகொள்ள முடியாது.

அரசியலமைப்பின் பிரிவுகளில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை சொல்வது தான் உங்களுக்கு அரசியலமைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட ஒரே உரிமை" என்று உச்ச நீதிமன்றத்தை சாடி துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியிருந்தார்.

முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஆர்ட்டிக்கிள் 142 -ஐ பயன்படுத்தி கிடப்பில் இருந்த 10 மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்கி இருந்தது.

அதற்கு பதிலளிக்கு விதமாக, திமுக எம்.பி திருச்சி சிவா, "அரசியலமைப்பின் கீழ், நிர்வாகம், சட்டமன்றம், நீதி ஆகியவை தனித்தனி அதிகாரங்களை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த மூன்றும் இயங்கினாலும், அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட மிக பிரதானம்.

சமீபத்தில், அரசியலமைப்பு பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றம் கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதி குறித்து கொடுத்த தீர்ப்பில், 'அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் உட்பட யாரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதோவை தாமதப்படுத்தவோ, நிறுத்திய வைக்கவோ முடியாது' என்பது தெளிவாகிறது. அப்படி செய்தால், அது அரசியலமைப்பிற்கு எதிரானது.

இந்தத் தீர்ப்பு குறித்தான துணை ஜனாதிபதியின் விமர்சனம் நியாயமில்லாதது. இந்தியாவில் 'சட்டத்தின் ஆட்சி' தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



from India News https://ift.tt/AmRwl0W

Post a Comment

0 Comments