தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் அப்பகுதியைச் சேர்ந்த சில குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்திருப்பதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், சாம்பவர்வடகரை கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை இடப்பிரச்னை காரணமாக ஊரை விட்டு விலக்கி வைத்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரிடம் பேசிய நபரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது. இதுபோல சாதி மறுப்புத் திருமணம் செய்த குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர்.
இவ்வாறு ஊர் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக 8 குடும்பங்களை ஊர் நாட்டாமை வெங்கடேஷ் என்பவர் ஊரை விட்டு விலக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு இடையூறுகள் ஏற்படுகிறது எனக் கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களைக் காவல்துறையினர் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உரிய அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 50-க்கும் மேற்பட்டோரை போலீஸ் கைது செய்தது. இதுதொடர்பான செய்திகளும், புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில், இந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தைத் தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 2 வாரக் காலத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோருக்குத் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தென்காசியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் 8 குடும்பங்களை விலக்கி வைத்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

from India News https://ift.tt/CpW18uV
0 Comments