'தமிழகத்தில் இன்று இரண்டாம் இடத்துக்குத்தான் போட்டி..!' - முதல்வர் ஸ்டாலின்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அவரைத்தொடர்ந்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த வாரத்தில் அடுத்தடுத்த நாள்களில் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தனர். இதனால், `அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டணியமைக்கப் போகிறது' என்று பரவலாகப் பேச்சுக்கள் எழத் தொடங்கின. ஆனால், `தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது, அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்' என இரு தரப்பினரும் கூறுகின்றனர்.

tvk vijay
tvk vijay

அப்படியே மறுபக்கம், ``2026-ல் த.வெ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் இடையேதான் போட்டி" என்று அண்மையில் நடைபெற்ற த.வெ.க பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறினார். இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டாம் இடத்துக்குத்தான் தற்போது போட்டி என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சென்னை பெரம்பூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்டாலின், ``இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்பபெற வேண்டும் என சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், இந்தத் தீர்மானத்தில்கூட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. இரவோடு இரவாக திட்டம் தீட்டி, யாருக்கும் தெரியாமல் விடியற்காலையில் விமானத்தில் டெல்லிக்கு சென்றார். அங்கு ஏதோ கொள்ளையடிக்கச் சென்றது போல, நான்கு கார்கள் மாறி மாறி சென்று, இந்தச் சட்டத்தைக் கொண்டுவரப்போகிற அமித் ஷாவைச் சந்தித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மறுநாள், இந்தத் தீர்மானத்தை நாம் கொண்டுவரப்போகிறோம் என்று தெரிந்தும் சட்டமன்றத்துக்கு வரவில்லை. அடுத்து நாங்கள்தான் ஆளுங்கட்சி என்று சொல்லிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்து நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று சொல்லக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். எனவே, இரண்டாவது இடத்துக்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் இன்று போட்டி ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் நாம்தான் முதல் இடத்துக்கு வருவோம். நான் ஏதோ மமதையில் சொல்வதாகவோ, அகங்காரத்தில் சொல்வதாகவோ நினைத்துக்கொள்ளாதீர்கள். மக்கள் நம்மை வரவேற்பதை வைத்து நான் இதைச் சொல்கிறேன்." என்று கூறினார்.



from India News https://ift.tt/0sUaH5r

Post a Comment

0 Comments