தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டம் மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கேடி ராமராவ் (கேடிஆர்) பங்கேற்பார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ``இது தமிழ்நாட்டின் பிரச்னை மட்டுமல்ல, தென் மாநிலங்களின் பிரச்னை என்பதால், இன்னும் சில மாநிலங்களும் பாதிக்கப்படும் என்று அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். தென் மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத பா.ஜ.க.,
வடமாநிலங்களில் பெறும் வெற்றியை வைத்தே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறது. அதுதான் சதி! தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படவுள்ள ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம், ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் இருக்கும் 29 கட்சிகளும் கலந்துகொள்ளும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஏற்கெனவே, ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீட் பட்நாயக் இந்தக் கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதன் தொடராக பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கே.டி ராமராவ் பங்கேற்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
நேற்று ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் தி.மு.க பிரதிநிதிகள் அமைச்சர் கே.என். நேரு, மாநிலங்களவை எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆகியோர் கே.டி.ஆரை சந்தித்தனர். தி.மு.க பிரதிநிதிகளைச் சந்தித்த பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்த கே.டி.ஆர், ``பல ஆண்டுகளாக மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு முயற்சிகளை வெற்றிகரமாகக் கடைப்பிடித்து வரும் தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விகிதாசாரமற்ற முறையில் தண்டனை விதிக்கும் வழி இந்த தொகுதி மறுசீரமைப்பு.
மத்திய அரசு தனது சொந்த உத்தரவுகளின்படி குடும்பக் கட்டுப்பாட்டை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்க விரும்புகிறது. இந்தக் கொள்கை தென்னிந்தியாவிற்கு மொத்த அநீதி. இது வெறும் தெலுங்கானா பிரச்னை மட்டுமல்ல, தென்னிந்திய பிரச்னை. நாம் இப்போது ஒற்றுமையாக நிற்கவில்லை என்றால், தேசியளவிலான முடிவுகளில் நமது பிரதிநிதித்துவமும் செல்வாக்கும் அநியாயமாகக் குறைந்துவிடும்.
கே.சந்திரசேகர ராவ்வின் வழிகாட்டுதலின்படி, மார்ச் 22-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்வோம். மேலும் தெலுங்கானாவின் கவலைகளை, பி.ஆர்.எஸ்-ஸின் உறுதியான நிலைப்பாடு ஆகியவை மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வோம்." என்றார்.
இவர்மட்டுமல்லாமல், இந்தக் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோருக்கும் தி.மு.க நேரில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

from India News https://ift.tt/RJZvxhe
0 Comments