நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் கட்சித் தொடங்கியதிலிருந்தேப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொள்கைத் தலைவனாகக் கொண்டு செயல்படும் இவர், அவரை சந்தித்தது குறித்தும், அவருடன் உணவு சாப்பிட்டது குறித்தும், பயணித்தது குறித்தும் தொடர்ந்து மேடைகளில் பேசிவந்தார். அப்போதே பலர், சீமான் கூறுவதெல்லாம் பொய்..." 'சீமான்பிரபாகரனை சந்திக்கவே இல்லை...' 'சீமான் பிரபாகரனை 10 நிமிடங்கள்தான் சந்தித்தார்' என்றெல்லாம் விமர்சித்தனர். இந்த விவகாரங்கள் அரசியல் வட்டாரத்தில் அப்போது விவாதமானது. இந்த நிலையில்தான் சமீபத்தில் பெரியார் குறித்தும், அவரின் கொள்கைகள் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்து சீமான் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
அதனால், பல அரசியல் தலைவர்களும் சீமானுக்கு கண்டனங்களையும், அதிருப்தியையும் தெரிவித்துவந்தனர். இதற்கிடையில்தான் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், `இவர் அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால், அந்தப் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவர் என்கிற அடிப்படையில்' என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது மீண்டும் அரசியல் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``நான் மக்கள் தொலைக்காட்சியில் 'வெங்காயம்' என்ற சீரியல் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயம் அங்கு வேலை செய்த செங்கோட்டையன் என்பவர் DVD ஒன்றை கொண்டு வந்தார். அதில் அண்ணன் சீமான் புகைப்படமும் தலைவர் பிரபாகரன் வேறு சில ஆளுமைகளுடன் இருக்கும் புகைப்படமும் இருந்தது. இதில் 'தலைவரும் அண்ணன் சீமானும் ஒன்றாக இருப்பது போன்று எடிட் செய்து கொடுக்கணும்' எனச் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார். எதற்காக என நான் கேட்டேன். அதற்கு அவர், ` அண்ணன் சீமானுக்கு நான் சர்ப்ஃரைஸ் கிப்ட் பண்ணப் போறேன்' என்றார்.
எனக்கும் அண்ணன் சீமானையும், தலைவர் பிரபாகரனையும் பிடிக்கும். அதனால் அந்த வேலையை ஆர்வமாகச் செய்துக்கொடுத்தேன். ஆனால், அந்தப் புகைப்படம், 'பிரபாகரனை நேரில் சந்தித்த சீமான்' எனச் சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் வந்தது. அப்போதே அது குறித்து நான் செங்கோட்டையனிடம் கேட்டேன். ``ஏதோ அவர் தேவைக்கு பயன்படுத்துகிறார்... தமிழக அரசியல் களத்தில் ஒரு அரசியல் தலைவரை உருவாக்க பயன்படுறதா இருக்கட்டுமே' என்றார்.
எனக்கும் சீமானைப் பிடிக்கும். அவரது சிந்தனைகளை உள்வாங்கியவன். அவருடைய தலைமையில் தமிழர் ஒருங்கிணைப்பு நடந்தால் நல்லது என்று நினைத்தேன். ஆனால், தொடர்ச்சியாக பிரபாகரன் குறித்து அவர் சொல்லி வந்தவையும், தற்போது தந்தை பெரியார் குறித்து பேசி வருவதையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இப்போது சொல்கிறேன்" எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதை நாம் தமிழர் கட்சியினர் மறுத்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்ளைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தன் எக்ஸ் பக்கத்தில், ``2009 லேயே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டைம் டிராவல் செய்து வரைந்திருப்பான் போல அந்த டுபாக்கூர் பெரியாரிஸ்ட் சங்ககிரி ராஜ்குமார்! மொத்தம் ஏழு புகைப்படங்கள் இருக்கு எதுடா நீ வரைந்தது?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/1mDnL3t
0 Comments