விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது சமூக, அரசியல் தளத்தில் ஆதரித்தும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது.
"அருந்ததியர் சமூகத்தினருக்கு கலைஞர் ஆட்சியில் வழங்கிய உள் ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அதை விமர்சித்தும், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் வந்த ரவிக்குமாருக்கு அம்பேத்கர் பெயரில் விருதா?" என்று அருந்ததியர் சமூக அமைப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
அத்துடன், ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது வழங்குவதை பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு தமிழ்ப்புலிகள் கட்சியினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணை அமைப்புச் செயலாளர் சிதம்பரம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சமூக நீதிக்கு சான்றாக தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று கலைஞர் வழியில் தமிழக அரசு, மற்ற மாநிலங்கள் வியக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருந்தும் விளிம்பு நிலையில் இருந்த அருந்ததியர் சமூகம் பட்டியல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை நுகர்ந்துகொள்ள முடியாத வகையில் பல இடர்களை சந்தித்து வந்ததை அறிந்த அப்போதைய முதலமைச்சர் கலைஞர், 2009 ஆம் ஆண்டில் அருந்ததியர் சமூகத்துக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீட்டை சமூக நீதி சிந்தனையுடன் வழங்கினார். பெரியாரும் அம்பேத்கரும் முன்னிறுத்திய சமூக நீதியை கலைஞர் நிலைநாட்டினார். இந்நிலையில், உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குகள் போடப்பட்டதில், மாநில அரசு உள் ஒதுக்கீடு கொடுத்தது செல்லும் என்று உச்சநீதிமன்றமே மகத்தான தீர்ப்பை அளித்தது. ஆனால், கலைஞர் கொடுத்த அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அம்பேத்கரின் சிந்தனைக்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் பேசி வந்த ரவிக்குமாருக்கு தமிழக அரசு அம்பேத்கர் பெயரில் விருது அறிவித்துள்ளதை அம்பேத்கரியர்களுக்கும், சமூக நீதியை விரும்பும் இடதுசாரிகளுக்கும் வருத்தத்தை அளிக்கிறது.
பட்டியல் சமூகத்தில் உள்ள மக்களை சுயசாதி பற்றோடு பிரித்தாலும் எண்ணம் கொண்ட ஒரு நபருக்கு, உள் ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அமைச்சரை சந்தித்து கலைஞரின் கனவை சிதைக்கும் நோக்கோடு செயல்பட்டவருக்கு அம்பேத்கர் விருது அறிவித்ததை பரிசீலிக்க வேண்டும். சுய சாதி பற்றோடு நடந்துகொள்ளும் இவருக்கு அம்பேத்கர் விருது எப்படி சரியாக இருக்கும்? அம்பேத்கரியத்தை ஏற்றுக்கொண்ட தமிழகத்திலுள்ள எழுத்தாளுமைகளுக்கு விருது வழங்குவதே சரியாக இருக்கும்" என்றார்.
மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தபால் நிலையத்திற்கு வந்த தமிழ்ப்புலிகள் கட்சியினர், `ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது வழங்கக் கூடாது' என வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
from India News https://ift.tt/QcixsgN
0 Comments