மனிதவளத் திறன்... தமிழ்நாட்டுக்கு முதலிடம்... ஒரு டிரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு வழிவகுக்கட்டும்!

‘இந்தியாவில் தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதில், தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கிறது’ என்று 2023-24-ம் நிதி ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையில் கூறியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

தமிழ்நாட்டில் 39,699 சிறு, குறு தொழில்கள் உள்ளன. அதன் மூலம் 4,81,807 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அவர்கள், 8,42,720 நாள்கள் பணி செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றெல்லாம் புள்ளிவிவரங்களை அடுக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.

பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்துறை செயல்பாடுகளில் முன்னிலையில் உள்ள மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள், தமிழ்நாட்டைவிட குறைவாகவே பணி வாய்ப்புகளை வழங்கியுள்ளன. அதாவது, சிறு, குறு தொழில்கள் உள்ள மகாராஷ்ட்ராவில் 6,45,222 தொழிலாளர்களுக்கு 7,29,123 நாள்கள் மட்டுமே பணி வாய்ப்புகளும், 31,031 சிறு, குறு தொழில்கள் உள்ள குஜராத்தில் 5,28,200 தொழிலாளர்களுக்கு 7,21,586 நாள்கள் மட்டுமே பணி வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆக, ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.75 நாள்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழ்நாடு. மகாராஷ்டிரா 1.13 நாள்களும், குஜராத் 1.37 நாள்களும் மட்டுமே வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன.

தமிழ்நாடு, மனிதவளத் திறன் பயன்பாட்டிலும், உற்பத்தித் திறனிலும் முன்னிலையில் இருக்கிறது; இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்துவரும் மாநில மாகவும் இருக்கிறது என்பதையே ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை ஆமோதிக்கிறது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிப்பது, திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்குவது என்று தற்போதைய தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருவதன் நல்விளைவுதான் இது. அதேசமயம், தொழிற் சாலைகளின் எண்ணிக்கையிலும், வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாடு, அதைப் பொருளாதார வளர்ச்சியிலும் அப்படியே பிரதிபலிக்க வேண்டும். அந்த வளர்ச்சியானது, எல்லோருக்குமானதாகவும் இருக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு அதிக நாள்கள் பணி வாய்ப்பு வழங்கப்படுவது எந்த அளவுக்கு முக்கியமோ... அதே அளவுக்கு முக்கியமானது... அவர்களுக்கான ஊதியம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களையும் உறுதிப்படுத்துவது. ஏனெனில், பெரும்பாலான நிறுவனங்கள், தங்களுடைய வளர்ச்சியின் வேகத்தில் தொழிலாளர்களுடைய நலன்களை மறந்துவிடுகிறார்கள் என்பது கண்கூடு. தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டாத எந்தவொரு நிறுவனமும்... நாடும்... நிச்சயமாக முன்னேற வாய்ப்பில்லை. இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகளை நாம் பட்டியலிட முடியும்.

ஆக, தொழிலாளர்களின் வளர்ச்சிக்கும் நலன்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அப்படிச் செய்தால், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்கிற இலக்கு, எளிதில் ஈடேறும் என்பதில் சந்தேகமில்லை!

- ஆசிரியர்



from India News https://ift.tt/6VkxXoz

Post a Comment

0 Comments