Vijay: "விஜய்யை ஒரு அரசியல்வாதியாக திமுக அங்கீகரிக்கவில்லை..." சொல்கிறார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனியில் வைப்பாற்றுப் படுகையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளைத் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேற்று (டிசம்பர் 8) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மேம்பாலம் கட்டும் பணி தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ஆய்வு

இதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஃபெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார். தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புயல் சேதம் குறித்து பிரதமரிடம் பேசிய பிறகு தான் மத்தியக் குழு தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். புயல் சேதம் தொடர்பாக மத்திய ஆய்வுக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே ஆய்வுக்குழு செயல்பாடு குறித்து கருத்துக்கூற முடியும்." என்று கூறினார்.

புத்தக வெளியீட்டு விழாவில், தி.மு.க. குறித்து நடிகர் விஜய் பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், "கலைஞர் காலம் முதல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை தி.மு.க.வை மையமாக வைத்துப் பேசாமல் தமிழகத்தில் அரசியல் இருக்காது. மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே உள்ள கட்சியினரும் புதிதாகக் கட்சி ஆரம்பித்தவர்களும் முதல்வர் மற்றும் தி.மு.க.வை மையப்புள்ளியாக வைத்துத் தான் பேச வேண்டியிருக்கிறது.

பாலப்பணி

நடிகர் விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். கள நிலவரம் அவருக்குச் சரியாகத் தெரியாது. த.வெ.க. தலைவர் விஜய், சினிமா ரசிகர்களை நம்பிக்கொண்டு தி.மு.க குறித்து விமர்சனம் செய்வது சரியான அரசியல்வாதிக்குரிய நாகரிகமாக இருக்காது. மேலும் தி.மு.க.வைப் பொருத்தமட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையில் தி.மு.க. கூட்டணி உள்ளது. அதற்குரிய களப்பணிகளைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறோம்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் வேங்கைவயல் சம்பவம் குறித்து விஜய் பேசியிருக்கிறார். வேங்கைவயல் சம்பவம் குறித்து காவல்துறையால் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் வேங்கைவயல் மக்கள் குறித்துப் பேசும் த.வெ.க தலைவர் விஜய் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று அந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தாரா? பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வேங்கை வயல் விவகாரத்தைப் பத்திரிகை செய்தியாக்கி மட்டுமே செல்கிறார்களே தவிர நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களுக்கு வேண்டிய சேவைகளை விஜய் செய்வதில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் களத்திற்குச் சென்று நேரடியாக உதவிக்கரம் நீட்டாத த.வெ.க. தலைவர் விஜய், திருமண மண்டபத்திற்கு அவர்களை வரவழைத்து உதவிசெய்திருக்கிறார். இவ்வளவுதான் விஜய்யின் அரசியல்.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

ஆனால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை, களத்திற்கு நேரடியாகச் சென்று தமிழக முதல்வர் சந்தித்து உதவிகள் செய்துவருகிறார். கள ஆய்வு செய்து மக்களுக்கு நேரடியாகச் செய்கின்ற செயலை போட்டோ ஷூட் செய்வதாக த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியது. நாங்கள் செய்வது போட்டோ ஷூட் என்றால் த.வெ.க. தலைவர் விஜய் செய்வதும் ஃபோட்டோ ஷூட்தான். மேலும் த.வெ.க தலைவர் விஜய்யை ஒரு அரசியல்வாதியாக தி.மு.க. அங்கீகாரம் செய்யவில்லை. எனவே அவர் பேசியது பற்றி தி.மு.க கவலைப்படத் தேவையில்லை" என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras



from India News https://ift.tt/JxeBurM

Post a Comment

0 Comments