'மழைக்கு கூட வெளியே வராதவர் விஜய், ஆனால் எங்களைப் பார்த்து..!' - தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ்க்ளூஸிவ்

"அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பா.ஜ.க, பா.ம.க ஆதரவளிக்குமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருக்கிறாரே?"

"அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அந்த பிரச்னைகளையெல்லாம் திசைதிருப்ப இதுபோன்ற மோசமான அரசியலை எதிர்க்கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. அதேநேரத்தில் முதல்வர் வீடு இருக்கும் பகுதிக்கு அதானி வந்தார் என்பதற்கான உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கூடவே முதல்வரின் குடும்ப உறுப்பினர்களை அதானி சந்தித்தார் என்கிற யூகங்களும் இருக்கின்றன. எனவே என்னையோ, என் குடும்ப உறுப்பினர்களையோ சந்திக்கவில்லை என்று முதல்வர் சொன்னால் தெளிவான விளக்கமாக இருக்கும்."

முதல்வர் ஸ்டாலின்

"ஆனால் 'அத்தானியைப் பாதுகாப்பதே பிரதமர் மோடிதான் என்கிறாரே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்?"

"இதற்கு மாணிக்கம் தாகூரிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?. எதிர்க்கட்சிகள் இப்படித்தான் பேசுவார்கள். இதையெல்லாம் பெரிதாக இட்டுக்கொள்ள வேண்டியதில்லை. இவ்வளவு ஏன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் அதானியை எதிர்த்து இந்தியா கூட்டணி நடத்தும் போராட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சரியாக இணைந்து போராடவில்லை என்கிற தகவல்களும் உள்ளன. அப்போது அதானியை எதிர்த்துப் போராடுவதில் இவர்களுக்கே தயக்கம் இருக்கிறது தானே?"

அதானி

"72 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்யசபா தலைவர் ஜக்தீப்  தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ளனவே?"

"அவர் சட்டம் பயின்றவர். ராஜ்ய சபா உறுப்பினராகவும், கவர்னராகவும் இருந்திருக்கிறார். எனவே எதிர்க்கட்சிகள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. சட்டவிதிகளைப் பின்பற்றுவதாகச் சொன்னால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். இது அப்பட்டமான அரசியல். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான அரசியலைச் செய்ய வேண்டும்"

ராகுல் காந்தி

"எதிர்க்கட்சிகள் பேசுவதைத் தடுக்கும் வகையில் பா.ஜ.க உறுப்பினர்களே அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்குவதாகக் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டிருக்கிறாரே?"

"பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல அவர்கள் முன்பு செய்துகொண்டிருந்ததை தற்போது நாங்கள் செய்கிறோம் என்கிறாரா?. தமிழகச் சட்டமன்றத்தில்தான் எதிர்க்கட்சிகள் பேசுவதைக் காட்டுவதில்லை. ஆனால் நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் பார்க்க முடியும். அப்படியிருக்கும் போது பா.ஜ.க உறுப்பினர்களே எப்படி நாடாளுமன்றத்தை முடக்குவார்கள்?"

சசிகாந்த் செந்தில்

" 'மணிப்பூரில் தொடர்ச்சியாகச் சட்டம் ஒழுங்கு மீறப்பட்டு வருகிறது. அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை' என, மத்திய அரசை த.வெ.க தலைவர் விஜய் கடுமையாகச் சாடியிருக்கிறாரே?"

"தி.மு.க-வை கடுமையாக விஜய் விமர்சனம் செய்வதை வரவேற்கிறேன். இதனால் அவரை சங்கி என ஸ்டாம் குத்திவிடுவார்கள் என அஞ்சுகிறார் போல. எனவேதான் மணிப்பூர் குறித்தும் சொல்லி வைப்போம் எனச் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே இரு சமூகங்களுக்கு இடையிலான பிரச்னை மணிப்பூரில் நிலவி வருகிறது. அதை ஒடுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய உள்துறை அமைச்சர் எடுத்து வருகிறார். விஜய் போன்றவர்கள் மழைக்குக் கூட வெளியில் வரவில்லை. ஆனால் எங்களைப் பார்த்து மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை எனக் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை மணிப்பூருக்கு விஜய்யை அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். அங்குள்ள மக்கள் மீது விஜய்க்குக் கவலை இருந்தால் செல்லலாம்"

திருமா

"எவ்வளவு முயற்சி செய்தாலும் தி.மு.க-வுடனான உறவில் பா.ஜ.க-வால் விரிசலை ஏற்படுத்த முடியாது என்கிறார்களே வி.சி.க-வினர்?"

"அவர்களே விரிசலை ஏற்படுத்திவிட்டு பா.ஜ.க-வை இழுப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆதவ் அர்ஜுனாவுக்கும் வி.சி.க-வும் இடையில்தான் பிரச்னை. அது உண்மையா, பொய்யா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. ஆதவ் அர்ஜூனா மீது எடுக்கும் நடவடிக்கையில் தீவிரத்தன்மை இல்லையோ என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் பா.ஜ.க-வை இழுக்கிறார்கள். இதன் மூலமே நாங்கள் வளர்ந்திருப்பது தெளிவாகிறது"

விஜய்

"ஆனால் "தி.மு.க, பா.ஜ.க எனத் தமிழக அரசியல் களத்தை மாற்ற முயற்சித்து வந்தீர்கள். தற்போது தி.மு.க, த.வெ.க எனக் களம் மாறியிருப்பதாகச் சொல்கிறார்களே?"

"அவர்கள் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்துச் செல்லத்தான் விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். தி.மு.க எதிர்ப்பு என்கிற ஆயுதத்தைத் தம்பி விஜய் கையில் எடுத்திருக்கிறார். அதைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மத்திய அரசியலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்களை எதிர்க்க வேண்டாம்"

அண்ணாமலை

"ஏற்கெனவே மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க பைல்ஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போதுதான் வெளியிடப்போகும் 'பைல்ஸ் - 3 தமிழக அரசைப் புரட்டிப்போடும் என்கிறாரே?"

"பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லிவிட முடியாது. செந்தில் பாலாஜி போன்றவர்கள் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். ஆளும் கட்சியின் ஊழல்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை. அதைத்தான் அவர் செய்கிறார்."

திருச்சி சூர்யா

"சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலை பைல்ஸ்-1 வெளியிடப்படும் என பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா எச்சரித்திருக்கிறாரே?"

"திருச்சி சூர்யா போன்றவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை"

செந்தில் பாலாஜி

"சரியான அப்பா அம்மாக்கு பொறந்திருந்தா கேஸ் போடு பார்க்கலாம் என செந்தில் பாலாஜியை, அண்ணாமலை விமர்சனம் செய்தது சரிதானா?"

"ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு பாணி இருக்கும். அவர் இப்படிப் பேசியதற்கு நான் கருத்துச் சொல்ல முடியாது"

ஆனந்த் டெல்டும்டே

"ஆனந்த் டெல்டும்டே குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?"

"ஆனந்த் டெல்டும்டே அர்பன் நக்சலாக இருந்ததற்கான அனைத்து ஆதாரமும் இருக்கிறது. எனவேதான் அண்ணாமலை கூறியதற்கு எதிர்ப்பு வரவில்லை. திருமாவளவன் எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு எதிர்க்கிறார்?"

கமலாலயம்

"பா.ஜ.க-வில் ஒரு கோடி பேரை உறுப்பினராக இணைக்க டெல்லி தலைமை டார்கெட் கொடுத்திருந்தது. ஆனால் 25 லட்சம் பேரைக்கூட இணைக்க முடியவில்லை என்கிறார்களே?"

"நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். 66,000 பூத்துகள் இருக்கின்றன. அதில் தலா 200 பேர் வீதம் ஒரு கோடியைப் பேரை இணைக்க இலக்கு வைத்தோம். இதுவரை எவ்வளவு பேர் இணைந்திருக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது. கணினியில் பதிவேற்றும் வேலைகள் நடக்கின்றன. உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்குப் பக்கத்தில் கூட வந்திருக்கலாம்.”

ஹெச். ராஜா

"ஜனவரியில் புதிய மாநிலத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என ஹெச்.ராஜா தெரிவித்திருந்தார். அதற்கான பணிகள் எந்த அளவில் இருக்கிறது?"

"கட்சியின் விதிமுறைகளின் படி குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அவர்களே மீண்டும் பதவிக்கு வரலாம். தேர்தல் நடப்பதால் மாற்றம் என்று இல்லை. இதுகுறித்து நான் எதுவும் சொல்ல முடியாது"

பிரதமர் நரேந்திர மோடி

"தமிழக நலனுக்காக பா.ஜ.க போராடுகிறது என்கிறீர்கள். ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு ரூ.1.25 லட்சம் கோடி கேட்ட பேரிடர் நிவாரண நிதி கேட்டிருக்கும் சூழலில் வெறும் 6% தொகையை மட்டுமே மத்திய அரசு கொடுத்திருப்பதாகக் காங்கிரஸ் விமர்சனம் செய்திருக்கிறதே?"

"காங்கிரஸ் ஆட்சியில்தான் தானே புயல் வந்தது. வெள்ளம் வடிந்த பிறகுதான் மத்தியக்குழுவே பார்வையிட வந்தது. மாநில அரசு கேட்ட நிதியில் 10% கூட கொடுக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி பாதிப்பு ஏற்பட்ட உடனேயே ரூ.9,000 கோடியை உடனடியாக வழங்கினார். தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்கள்"

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil



from India News https://ift.tt/rRbFxtu

Post a Comment

0 Comments