அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் அதிபரும் தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வாகை சூடி இருக்கிறார்
அதேபோல இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று, டெலாவேர் மாகாண செனட்டரான 34 வயதான சாரா மெக்பிரைட், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இடம் பிடித்திருக்கிறார். இதன் மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் திருநங்கை உறுப்பினர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார்.
மெக்பிரைட்டுக்கு இதுவொன்றும் முதல் தேர்தல் வெற்றி அல்ல... டெலாவேர் மாகாண செனட்டின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான பிறகு, 2020-ல் மாநில செனட் இருக்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை சாரா மெக்பிரைட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல பராக் ஒபாமாவின் ஆட்சியில் 2012-ல் வெள்ளை மாளிகையில் பயிற்சி பெற்ற முதல் திருநங்கை... 2016-ல் ஜனநாயக தேசிய மாநாட்டில் உரையாற்றி அரசியல் கருத்துகளை முன்வைத்த முதல் திருநங்கை என அமெரிக்க அரசியல் வரலாற்றில் சாரா மெக்பிரைட்டின் பெயர், பல பக்கங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் காவல்துறை அதிகாரியும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான ஜான் வேலனைத் தோற்கடித்து, சாரா மெக்பிரைட் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு சாரா மெக்பிரைட், ``என்னைப் போன்ற ஒருவரின் வேட்புமனுகூட சாத்தியம் என்பது டெலாவேரியன்களுக்கு ஒரு சான்றாகும்.
இனப்பெருக்க சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நாடாக நாம் இருக்க வேண்டும், மேலும் இது நம் அனைவருக்கும் போதுமான பெரிய ஜனநாயகம் என்று டெலாவேர் தெளிவாக உணர்த்தியிருக்கிறது” என்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ``சுகாதாரத்தை மேம்படுத்துவதில் எனது கவனம் அதிகம் இருக்கும்" என்றும் சாரா மெக்பிரைட் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கத் தேர்தலில் திருநங்கைகளின் உரிமைகள் ஒரு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகளின் பங்கேற்பு மற்றும் பாலின உரிமைகளை உறுதிப்படுத்தும் கவனிப்புக்கான அணுகல் ஆகியவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
``ஜனநாயக கட்சியினர் பெரும் அளவில் திருநங்கைகளின் உரிமைகளை ஆதரிக்கின்றனர். ஆனால் திருநங்கைகளுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகளை அளிப்பதில்கூட குடியரசு கட்சியினருக்கு முரண்பாடு உள்ளது." என்கின்றனர் அமெரிக்க அரசியல் நோக்கர்கள்.
அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே நடைபெற்ற விவாதத்தில், ஜனநாயகக் கட்சியினரை “இடதுசாரி பாலின பைத்தியக்காரத்தனம்” என்று குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், திருநங்கைகள் குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் சாரா மெக்பிரைட்டின் இந்த வெற்றி, குறிப்பிட்ட சமூகத்தின் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடியாக அமைந்திருக்கிறது. கடந்த தேர்தல்களைக் காட்டிலும், இந்த தேர்தலில் திருநங்கைகள் அதிக அளவில் தேர்தல் களத்தில் போட்டியிட்டதாகக் கூறப்படுகிறது.
LGBTQ+ சமூகத்தின் உரிமைகளுக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் உரக்க பேசப்போகும் சாரா மெக்பிரைட்டுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
from India News https://ift.tt/zHB9u4b
0 Comments