Vck: `மதுக்கடைகள் மூடப்பட்டால், 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்...' - திருமாவளவன் பேச்சு

நேற்று கள்ளக்குறிச்சியில் வி.சி.க சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ``இந்த மாநாடு மது ஒழிப்புக் கொள்கைக்கானது. இந்த கோரிக்கையை நாம் கண்டுபிடிக்கவில்லை. புரட்சியாளர் அம்பேத்கரின் ஆசான் புத்தர் காலத்திலிருந்து இந்தக் கொள்கை பேசப்பட்டு வருகிறது. திருமா ஏன் இப்போது இந்தக் கொள்கையை பேசிக்கொண்டிருக்கிறார் என கேள்வி எழுப்புகிறார்கள்.

விசிக மது ஒழிப்பு மாநாடு

புத்தர், மகாத்மா பூலே, அம்பேத்கர், பெரியார், திருவள்ளுவர், அய்யா வைகுண்டர், நாராயண குரு போன்றவர்களின் வழியில் வந்தவன் என்பதால், எனக்கு இந்த சிந்தனை இருக்கிறது. நாங்கள் சாதிப் பெருமை, மதப் பெருமை பேசுபவர்கள் அல்ல. புத்தரின் கொள்கையை பேசுபவர்கள். இந்த மாநாட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமானது. இதுவரை நமது மாநாடுகளில் பயன்படுத்தாத ஒரு உருவம் இந்த மாநாட்டில் பயன்படுத்தியிருக்கிறோம். அதுதான் தேசப்பிதா மாகாத்மா காந்தியின் உருவம். இன்னொருவர் மூதறிஞர் ராஜாஜியின் உருவம்.

ஏனென்றால் இது அரசியலுக்கான மாநாடு அல்ல. அதனால்தான் மதுவை வேண்டாம் எனக் கூறக்கூடிய அத்தனைப்பேரின் உருவமும் இந்த மாநாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காந்தியின் மது விலக்கு, மதச்சார்பின்மை ஆகிய இரண்டு கொள்கையில் வி.சி.க-வுக்கு உடன்பாடு உண்டு. புத்தர் மது அருந்தக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, கொலை செய்யக் கூடாது, வரைமுறையற்ற காமம் கூடாது என போதித்தார். இதில் முக்கியமானது மது அருந்தக் கூடாது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக மாந்தார் எல்லோருக்குமானது. அவருடைய கொள்கையை பின்பற்றி இந்தியா முழுவதும் மது விலக்கு வேண்டும் எனக் கூறுகிறேன்.

திருமாவளவன்

இன்று வரை ஒரு சமூகம் மதுவை தொடாமல் இருக்கிறது என்றால் அது இஸ்லாமிய சமூகம்தான். இஸ்லாமிய நாடுகளில் மதுக்கடைகளை பார்க்க முடியாது. நபிகள் நாயகம் மறைந்து 1400 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை ஒரு சமூகம் மதுவிலிருந்து விலகி நிற்கிறது என்றால், அதற்கு நபிகள் நாயகத்தின் போதனைதான் காரணம். 'மது பாவங்களின் தாய்' எனக் கூறியவர் நபிகள் நாயகம். இந்த நாள்வரை அந்த சமூகம் அதை பின்பற்றுகிறது. ஒரு சமூகத்தையே மதுவை தொடாமல் இருக்கச் செய்த சாதனை நபிகள் நாயகத்தை சேரும்.

திருவள்ளுவர் கள்ளுண்ணாமை எனும் ஒரு அதிகாரத்தையே எழுதியிருக்கிறார். அவர் எந்த அரசியலையும் சார்ந்தவர் அல்ல. உலகில் தோன்றிய மகான்கள் யாரும் மதுவை ஆதரிக்கவில்லை. வள்ளலார் சனாதனத்தை, மூட நம்பிக்கைகளை, சாதியை, மது அருந்தக் கூடாது எனக் கடுமையாக எதிர்த்தார். நாடார் சமூகத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்டர் குடிக்கக் கூடாது எனக் கூறினார். கேரளாவின் நாராயண குருவும் அதே கருத்தைதான் சொன்னார்.

திருமாவளவன்

ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறோம். அம்பேத்கர் புத்த மதத்தை ஏற்றபோது 22 உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டார். அதில் ஒன்று, 'நான் என் வாழ்நாளில் மதுவை தொடமாட்டேன்' என்பது. அவர்தான் உண்மையான புத்திஸ்ட். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால்தான் இந்தியளவில் மது விலக்கு வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன்.

மனித வளம், உழைப்புச் சுரண்டல், பொருளாதார சுரண்டல் என அனைத்தும் மதுவால் பறிக்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் இந்த நாட்டை சாதி வெறி, மத வெறியிலிருந்தும் கருத்தியல் ரீதியாக போர் செய்து கட்டிக்காப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், குடிப்பழக்கத்துக்கு ஆளாகி அடிமையானால் இந்த சமூகம் என்னவாகும். அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற தலைவர்கள் போதைக்கு அடிமையானால் அவர்கள் கிடைத்திருப்பார்களா? மது - போதை ஒழிப்போம் மனித வளம் காப்போம்.

திருமாவளவன்

இந்த மாநாட்டில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இதில் தேர்தல் அரசியல், கூட்டணி அரசியல் பேச வேண்டாம் எல்லோரும் சேர்ந்து மது ஒழிப்பை சாத்தியப்படுத்தலாம் என பேட்டியளித்தேன். ஆனால், சிலர் 'திருமாவளவன் அ.தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்தார், கூட்டணி மாறப்போகிறார்' எனப் பேசி இந்த மாநாட்டின் நோக்கத்தை சிதைத்து விட்டார்கள். சொல்லப்போனால் அவர்கள், மதுவை ஒழிக்க முடியுமா? இதற்குப் பின்னணியில் எந்த மாஃபியா கும்பல் இருக்கிறது? போதைப் பொருள் இந்தியா முழுவதும் இருக்கிறதே, மது ஒழிப்பு தொடர்பாக இயங்கும் இயக்கம் என்னென்ன, காந்தியின் கொள்கையையும், அதை ஏற்று பெரியாரும் மணியம்மையும் அதை ஆதரித்து முன்னெடுத்த போராட்டம், இந்த விவகாரத்தில் அண்ணாவின் கொள்கை, திருவள்ளுவரின் கள்ளுண்ணாமை போன்றவை குறித்து விவாதித்திருக்க வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் விட்டு, அற்ப விவாதங்களை பேசி இந்த மாநாட்டின் நோக்கத்தை திசை திருப்பிவிட்டார்கள். காவிரி, ஈழப் பிரச்னை குறித்து தி.மு.க - அ.தி.மு.க சேர்ந்து பேச வேண்டும் என நாம் கூறவில்லையா? அதுபோல தான் இதையும் முன்னெடுத்தோம். சாதி ஒழிப்பை, மதப் பிரச்னையை போல மது ஒழிப்பையும் தேசியப் பிரச்னையாக பார்க்க வேண்டும். அதானியின் துறைமுகம், விமான நிலையங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. அதற்கு ஆளும் அரசால் பதிலளிக்க முடியவில்லை.

திருமாவளவன்

கள்ளச்சந்தையில் போதைப் பொருள் விற்கப்படுகிறது. அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மாஃபியா இயங்கி வருகிறது. இதை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கல்லூரி, பள்ளி மாணவர்களிடமும் இந்த போதைப் பொருள் சென்றிருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்ற கவலை நமக்கு இருக்கிறது. கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்யும் தி.மு.க-வை இந்த மாநாட்டிற்கு எப்படி அழைக்கலாம்... எனக் கேட்பார்கள். ஆனால் அப்படி இருந்தும் அவர்கள் மேடைக்கு வந்திருக்கிறார்கள்.

அப்படியானால், இதை பாராட்ட வேண்டுமா இல்லையா? ஏனென்றால் அவர்களுக்கும் மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கிறது. சில நடைமுறை சிக்கலால் சாத்தியபடுத்தமுடியவில்லை. தமிழ்நாடு அரசுக்கான கோரிக்கை மதுக்கடைகளை மூடு. இந்திய அரசிடம் இந்தியா முழுவதும் மதுக்கடைகளை மூட சட்டம் இயற்று என இரு அரசிடமும் கோரிக்கை வைத்திருக்கிறோம். கலைஞர் 'மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் நிதி ஒதுக்கவில்லை. அதனால் 'நெருப்பு வளையத்தில் சிக்கிக்கொண்ட கற்பூரம் போல வேறு வழியில்லாமல் மதுக்கடைகளை திறந்தேன்' என கலைஞர் கூறினார்.

திருமாவளவன்

டாஸ்மாக் என ஒரு அமைப்பாக இதை உருவாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா-வுக்கு இதில் என்ன பங்கு என்பதை யாரும் பேசுவதில்லை. நான் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தபோது 'எனக்கு என்ன மதுக்கடைகளை மூடக் கூடாது என்ற ஆசையா இருக்கிறது. ஆனால், உடனடியாக அப்படி செய்வதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது... இதை மனதில் வைத்திருக்கிறேன்' எனக் கூறினார். மதுக்கடைகள் மூடப்பட்டால், 2026-ல் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்.

சராசரி அரசியல்வாதியாக நம்மை எடைபோடுகிறார்கள். பெரியார் போல, வைகுண்டம் போல தேர்தல் அரசியலே வேண்டாம் என முடிவு செய்தால், திருமாவளவன் தயாராவானே தவிர, முன்வைத்தக் காலை பின்வைக்க மாட்டேன். என் கைகள் சுத்தமாக இருக்கிறது. திருமாவளவன் தினமும் குடிப்பவர் என்ற பொருள்படும்படி அக்கா தமிழிசை பேட்டியளித்திருக்கிறார். தமிழிசை அவர்களே நீங்கள் குடிக்கமாட்டீர்கள் என நான் நம்புகிறேன். உங்களைப்போலதான் நானும். எனக்கும் அந்தப் பழக்கம் இல்லை.

விசிக மது ஒழிப்பு மாநாடு

ராஜாஜி 1937-ல் மதுக்கடைகளை திறக்கமாட்டேன் என உறுதியாக இருந்தார். வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் ஒன்றிய அரசின் கடமையா? முஸ்லிம்களில் 90 சதவிகித மக்கள் குடிப்பதில்லை. ஆனால் இந்துக்களில் குடிப்பவர்களின் சதவிகிதம் மிக அதிகம். இந்துக்களின் பாதுகாவலர் எனக் கூறிக்கொள்ளும் மோடி அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டுமா? இல்லையா? பெண்கள் மதுவுக்கு எதிரான இந்த யுத்தத்தை தீவிரமாக தொடங்க வேண்டும்." எனப் பேசினார்.



from India News https://ift.tt/khT3rPL

Post a Comment

0 Comments