‘ஒருநாளைக்கு 10,000 ஃபிரிட்ஜ்கள், 9 நொடிகளில் ஒரு ஃபிரிட்ஜை உற்பத்தி செய்கிறோம். அதிக நேர வேலை, எலும்புத் தேய்மானம், குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லக்கூட விடுமுறை கொடுப்பதில்லை, 10 ஆண்டுகளைத் தாண்டியும் 25,000 ரூபாயைத் தாண்டாத சம்பளம், மாடு மாதிரி மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள். கேள்வி கேட்டால் தனி அறையில் ஒருநாள் முழுவதும் உட்கார வைத்து உளவியல் தாக்குதல் நடத்துகிறார்கள்’ என அத்தனை பேரிடம் வேதனைக் குரல்கள். வேதனையைத் தாண்டி தங்களுக்கான உரிமைக்காக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது உழைப்பர்வகளின் குரல். 25 நாள்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிலாளர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும், ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிற்சாலையில் ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு 9 நொடிகளுக்கும் ஒரு ஃபிரிட்ஜ் என ஒருநாளைக்கு 10,000 ஃபிரிட்ஜ்கள், 5,000 வாஷிங் மெஷின்கள் தயாரிக்கப்பட்டு இங்கிருந்து 7 உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக அளவில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலைகளில் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது இந்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலைதான்.
ஆண்டுக்குப் பல மில்லியன் வருமானம் ஈட்டிவரும் இந்தத் தொழிற்சாலை, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டும் அடிமாட்டு விலையில் ஊதியம் வழங்கி, அதிக நேரம் வேலை வாங்கி உழைப்புச் சுரண்டலை செய்துவருவகிறார்கள் என்பதுதான் இங்கு பெரும் போராட்டம் வெடிக்கக் காரணமாகியிருக்கிறது என்கின்றனர் தொழிலாளர்கள்.
இப்போராட்டத்தின் ஒரே நோக்கம், தங்களது பிரச்னைக்கானத் தீர்வு, ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்து, அதன் மூலம் தங்களுக்கானத் தேவைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்வதுதான் என்கிறார்கள் அங்குப் போராடும் தொழிலாளர்கள். தொழிற்சங்கத்தைப் பதிவு செய்து அங்கீகரிக்கும் வரை காலவரையற்ற இப்போராட்டம் தொடரும் என்று உறுதியுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் துணைநிற்கிறது ‘சிஐடியு’ தொழிற்சங்கம்.
இதுகுறித்த களநிலவரத்தைத் தெரிந்துகொள்ள போராட்ட களத்திற்குச் சென்றிருந்தோம். அங்கு சாம்சங் தொழிலாளர்கள் யூனிஃபார்முடன் தினமும் வேலைக்குச் செல்வதுபோலவே காலையில் வந்து போராட்டம் செய்துவிட்டு, மாலையில் வீடு திரும்புகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தொழிற்சங்கங்களும், விருப்பமுள்ள தனிநபர்களும் சேர்ந்து போராடும் தொழிலாளர்களுக்கான குடிநீர் மற்றும் உணவிற்கானச் செலவுகளை ஏற்றுக் கொள்கின்றனர். தங்களது பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையைக் கைவிட்டுவிடாமல் உறுதியுடன் அத்தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராடுகின்றனர்.
இப்போராட்டம் குறித்து அங்கிருந்த சாம்சங் தொழிலாளர்கள் சிலரிடம் பேசினோம். ஊதியப் பிரச்னைகள் குறித்துப் பேசிய ஒருவர், “நான் 12 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். 6,000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தேன். இப்போது எனக்கு 20,000 ரூபாய் சம்பளம். இந்த 12 ஆண்டுகளில் எவ்வளவோ விலைவாசி ஏறிவிட்டது. விலைவாசி ஏறிய அளவிற்குக்கூட என் சம்பளம் ஏறவில்லை. சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கச் சொன்னால்; ’A,B,C,D,E’ என கிரேடு முறையைக் கொண்டுவருகிறார்கள். அதன்படி நல்ல கிரேடு எடுப்பவர்களுக்கு ரூ.200, ரூ.300, ரூ.500 என கூடுதலாகத் தருகிறார்கள். அடுத்த மாதம் கிரேடு குறைந்துவிட்டால் அதுவும் கிடைக்காது. இந்த கிரேட் வகுப்பதற்கும் முறையான விதிமுறைகள் ஏதுமில்லை. ஒருநாள் விடுமுறை எடுத்தாலும், வேலைநேரத்தில் 10 நிமிடம் ஓய்வெடுத்துவிட்டாலும் இந்த கிரேடுகள் குறைக்கப்படும். நிறுவனத்தின் மேனேஜர்களே அவர்கள் விருப்பத்திற்கேற்ப கிரேடுகளை ஏற்றி, இறக்கிப் போட்டுவிடுவார்கள். அதற்கு ஏதொவொரு காரணமும் சொல்லிவிடுவார்கள்” என்றார்.
விடுமுறை எடுப்பதில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசிய மற்றொரு தொழிலாளர், “ஒருநாளைக்கு 10,000 ஃபிரிட்ஜ்கள், 5,000 வாஷிங் மெஷின்கள் உற்பத்தி செய்கிறோம். 9 நொடிகளில் ஒரு ஃபிரிட்ஜை தயார் செய்துவிடுவோம். இப்படி இடைவிடாமல் இயந்திரத்துடன் போட்டிப் போட்டு வேலை பார்த்து பார்த்து என் தோள்பட்டை எலும்பெல்லாம் தேஞ்சுபோச்சு. அதற்காக விடுமுறை எடுக்கக்கூட மேனஜரிடம் போராட வேண்டியிருந்தது. மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட்டுகள், ஸ்கேன் செய்த படங்கள் எல்லாவற்றையும் காட்டி, ‘ஒருமாதத்திற்கு வேறு வேலை கொடுங்கள் அல்லது மருத்துவ விடுமுறை கொடுங்கள். பாதிக்கப்பட்ட அதே கையில் வேலை செய்யமுடியவில்லை’ என்றேன். கொஞ்சம் கூட மனம் இறங்காமல் அதே வேலையைச் செய்யச் சொன்னார்கள். மருத்துவ விடுமுறையைக்கூட சரியாக வழங்குவதில்லை. எங்களுக்கு வழங்கப்படும் விடுமுறையையும் எடுக்க விடுவதில்லை. அம்மா, குழந்தைகள், மனைவி என யாருக்கு மருத்துவ அவசரம் என்றாலும் ‘வேறு யாரைவது அனுப்பி வையுங்க, நீங்க ஆபீஸ் வந்துருங்க..’ என்று மனசாட்சியில்லாமல் நடந்துகொள்கிறார்கள். சிறுநீர் கழிக்கக்கூட விடுவதில்லை. அந்த நேரத்தில் உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார்கள். யாருக்கு என்ன நடந்தாலும் உற்பத்தி கொஞ்சம்கூடக் குறையக் கூடாது என்று லாப வெறியுடன் வேலை வாங்குகிறார்கள்.” என்றார் வேதனையுடன்.
மற்றொருவர், “பண்டிகை மாதங்களில் உற்பத்தி அதிகமாகச் செய்யவேண்டியிருக்கும். அந்த மூன்று, நான்கு மாதங்களில் கல்யாணம், காது குத்து போன்ற விஷேசங்களை வைத்துக்கொள்ள வேண்டாம் என்பார்கள். ஒரு நல்லது கெட்டது என்றாலும்கூட எங்கும் செல்ல முடியாது. வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஆனால், சனிக்கிழமை இரவு வேலை பார்த்துவிட்டு, ஞாயிறு பகலில் வீட்டில் தூங்கிவிடுவோம். இரவில் கண்விழித்துப் பார்த்தால் அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லோரும் தூங்குவார்கள். அடுத்த நாள் காலை மீண்டும் வேலைக்குச் சென்றுவிடுவோம். அந்த சனிக்கிழமை இரவு விடுமுறை கொடுத்தால்தான் ஞாயிற்றுக்கிழமை ஒருநாளாவது எங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியும். அதைக்கூட தர மாட்டார்கள். இந்த நிறுவனத்திற்காக மில்லியன்களில் லாபம் ஈட்டித்தரும் எங்களுக்கு ஒருநாள் கூட முழுமையான விடுமுறை கிடைக்காமல், சரியான சம்பளமுமில்லாமல் மாடு மாதிரி நடத்தப்படுகிறோம். இதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் ஒருநாள் முழுவதும் தனி அறையில் எங்களை கட்டாயப்படுத்தி உட்காரவைத்து, கேவலமாகத் திட்டி உளவியல் தாக்குதல்களை ஏற்படுத்துகிறார்கள். ” என்று வேதனையுடன் பேசினார் அந்த சாம்சங் தொழிலாளி.
இப்படி அங்கிருக்கும் ஒவ்வொருவரைத் தொட்டாலும், பல நூறு வேதனைகள் வெளிவருகின்றன. அவர்கள் எல்லோரும் அடக்கி வைத்திருந்த அந்த வேதனைக் குரல்கள்தான் இப்போது உரிமைக்கான போராட்டக் குரலாக வெடித்திருக்கிறது. இனியும் இதை சகித்துக் கொள்ள முடியாத நிலையில், இழப்பதற்கு ஏதுமில்லை என போராட்டத்தில் இறங்கியிருக்கின்றன. நிறுவனத்தின் வெற்று வாக்குறுதிகளை நம்பி வேலைக்குத் திரும்பினால், ஏமாற்றமே மிஞ்சும். போராடியவர்களை அடையாளம் கண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணிநீக்கம் செய்ய ஏற்பாடுகள் நடக்கும். இப்படியான அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், இனியும் உழைப்புச் சுரண்டல் நடக்காததை உறுதி செய்யவும் 'தொழிற்சங்கம்' அமைப்பதே ஒரே தீர்வு என்று ஒன்றைக் குரலாக ஒலிக்கின்றனர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்.
இந்த விவகாரத்தில் இதுவரை ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அப்பேச்சுவார்த்தைகளில் ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தரப்பு, ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. தொழிற்சங்கம் அமைந்துவிட்டால் தொழிலாளர்கள் உரிமைக் குரல்களை அடக்குமுறை செய்யமுடியாது என்று தொழிற்சங்கம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்கிறார்கள் போராடும் தொழிலாளர்கள். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கும் வெற்று வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறதாம்.
அரசும் தொழிலாளர்களின் உரிமைக் குரலாக ஒலிக்காமல், சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் முதலாளித்துவத்தின் குரலாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டைத் தொழிலாளர்கள் முன்வைக்கிறார்கள். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து வரும் அரசு, அந்நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குப் பிரச்னை என்றால் கண்டுகொள்ளாமல் கள்ளமெளனம் சாதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது என்று குமுறுகிறார்கள்.
இப்போராட்டம் குறித்துப் போராட்டக் களத்தில் இருந்த ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்’ தலைவர் முத்துக்குமாரிடம் பேசினோம். “எங்களின் இந்தப் போராட்டம் 25 நாள்களைத் தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், எங்களுக்கான கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கம், ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதில் தமிழ்நாடு அரசு தலையிட்டுப் பேசியும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. தொழிற்சங்கம் அமைப்பது என்பது இந்திய அரசியல் சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அந்த அடிப்படையான நம் நாட்டின் சட்டத்தைக்கூட தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. சாம்சங் நிறுவனமும் சட்டத்தை மதிக்கமாட்டேன் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது.
தொழிற்சங்கம் அமைப்பது, எட்டு மணிநேர வேலை, உழைப்புக் கேற்ற ஊதியம் என்பது இந்திய அரசு தொழிலாளர்களின் நலனுக்காக ஏற்படுதியுள்ள அடிப்படையான சட்டம். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சட்டப்படி நாங்கள் எங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
எங்களின் தொழிற்சங்கத்தையும், கோரிக்கைகளையும் ஏற்காமல் பணி நீக்கம் செய்வேன், சம்பளத்தை நிறுத்தி வைப்பேன், இடமாற்றம் செய்வேன், குடும்பங்களை மிரட்டுவேன், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கிறார்கள் அவதூறு பரப்புவேன் என சாம்சங் நிறுவனம் போராடும் தொழிலாளர்களை மிரட்டி வருகிறது. இவையெல்லாம் நம் நாட்டின் சட்டத்திற்கு எதிரானது. எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தமிழ்நாடு அரசு ‘போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று சாம்சங்கின் குரலாகப் பேசுகிறது. சாம்சங் தொழிலாளர்களுக்காக நிற்கும் சிஐடியு போன்ற சங்கங்களிடமும், சாம்சங் தொழிலாளர் அல்லாத வெளி ஆட்களிடமும் பேசமாட்டோம் என்கிறது சாம்சங் நிறுவனம். சாம்சங் தொழிலாளர்களுக்காகத் துணை நிற்பவர்களை இதிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறது.
சிஐடியு தொழிற்சங்கங்கள் எங்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கின்றன. எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம். சிபிஐ (எம்), சிபிஐ (எம்.எல்) போன்ற இடதுசாரிக் கட்சிகள் சாம்சங் தொழிலாளர்களுக்காக வரும் அக்டோபர் 5ம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகின்றன. இப்போராட்டம் பரிணமித்து அடுத்தடுத்தக் கட்டத்திற்குச் செல்லும், மாநிலம் முழுவதும் பரவி தீவிரமாகலாம்.
தமிழ்நாடு அரசு இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, உறுதியாக நின்று சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். தொழிற்சங்க உரிமை, கூட்டு பேரம் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டும். கொரியாவில் இருக்கும் சாம்சங் நிறுவனத்தினர் தமிழ்நாடு அரசிற்கு ஓட்டுப்போடவில்லை. தமிழ்நாட்டு மக்கள்தான் ஓட்டுப் போட்டார்கள். இதையெல்லாம் மனதில் வைத்து சாம்சங் நிறுவனத்தின் பக்கம் நிற்காமல், தொழிலாளர்கள் பக்கம் நிற்க வேண்டும் தமிழ்நாடு அரசு.
இந்தியாவில் மட்டுமே அடிமட்ட சம்பளத்தில் நல்ல திறமையான தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். ஊதியத்தைப் பொறுத்தவரை கொரியாவில் இருக்கும் சாம்சங் தொழிலாளர்களுக்கு மூன்று முதல் ஐந்து லட்சம் வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. இங்கு அவ்வளவு ஊதியம் தரவில்லை என்றாலும், இந்த நாட்டின் பொருளாதார சூழலுக்கேற்ப உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சர்வதேச சந்தையில் ஒரே விலையில்தான் விற்கப்படுகிறது. வரிக் கட்டணம் மட்டுமே அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்கள் மட்டுமே சர்வதேச அளவில் ஒரே விலையில் விற்கப்படும். ஆனால், தொழிலாளர்கள் சம்பளம் மட்டும் ஒரே மாதிரி இருக்காது. நம் சென்னையில் உற்பத்தியாகும் சாம்சங் பொருட்களின் உற்பத்தியும், அதன் உழைப்பிற்கான செலவுகளும் மிகக்குறைவு. அதனால் சாம்சங் இங்குக் குறைந்த விலையில் தனது பொருட்களை விற்பனை செய்யுமா? செய்யாது.. இதுதான் முதலாளித்துவத்தின் கொடூரமான வணிகத் தந்திரம். தொழிலாளர்கள் அனைவருக்கும் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்குவதே நியாயமாக இருக்கும்” என்றார்.
தெற்கு இரயில்வே ஓய்வூதிய யூனியனின் தலைவர் இளங்கோ பேசுகையில், “சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய தமிழ்நாடு அரசு சாம்சங் நிறுவனத்திற்குத் துணைபோய் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், சாம்சங் நிறுவன வழக்கறிஞம் ஒரே மாதிரியாக, சாம்சங் தொழிலாளர்கள் அமைக்கும் ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ பெயரில், ‘சாம்சங்’ என்ற பெயர் இடம்பெறக் கூடாது என்று கூறுகிறார்கள். அந்தப் பெயரை நீக்கினால் சங்கத்தைப் பதிவு செய்வோம் என்கிறார்கள். இவர்கள் கூறுவது முழுக்க முழுக்க சட்ட விரோதமானது. நிறுவனத்தின் பெயரை தொழிற்சங்கத்தின் பெயரில் வைக்க எந்தத் தடையும் சட்டத்தில் இல்லை. கொரியாவில் இருக்கும் சாம்சங் தொழிற்சங்கத்தின் பெயர், ‘நேஷனல் சாம்சங் எலெக்ட்ரானிக் யூனியன்’. அங்கு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இங்கு மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
அரசு எங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பது மட்டுமின்றி, எங்களுக்கு எதிராக செயல்படுகிறது. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை நடத்துகிறது. பல்வேறு இடையூறுகளைக் கொடுக்கிறது.
ஒருநாளைக்கு 9 மணிநேரத்திற்கு மேலாக வேலை வாங்கப்படுகிறது. அதற்கு மேல் இரண்டு மணி நேரம் கூடுதல் பணிநேரம் (OT) போடுகிறார்கள். இப்படி அதிக நேரம் வேலை செய்யவில்லை என்றால் ‘வேலை செய்ய மறுத்தார்’ என ஒருநாள் முழுக்க தனி அறையில் தொழிலாளரை உட்கார வைத்து வசைபாடி உளவியல் தாக்குதல் நடத்துகிறார்கள். ஓய்வின்றி தொடர்ந்து வேலை செய்வதால் தொழிலாளர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகிறது. அதற்காக விடுமுறையும் வழங்குப்படுவதில்லை. வேலை பார்க்கும் நேரத்தில் சிறுநீர்க் கழிக்கக்கூட விடுவதில்லை. இது முழுக்க முழுக்க தொழிலாளர் விரோதப்போக்கு. சட்டத்திற்கு புறம்பான செயல். உரிமைகளை கேட்டால், ‘கூறையில சோறுபோட்டா ஆயிரம் காக்க வரும். நீ இல்லையென்றால் வேறு ஆளைப் போடுவேன்’ என்று முதலாளித்துவ ஆணவத்துடன் பேசுகிறார்கள், மிரட்டல் விடுக்கிறார்கள். இந்தச் சட்டவிரோதப் போக்கிற்கும், தொழிலாளர்கள் விரோதப் போக்கிற்கும் தீர்வு கண்டே ஆக வேண்டும் எனப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தொழிலாளர்கள். தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும்” என்று அழுத்தமாகப் பேசினார்.
தொழிற்சங்கங்கள் அமைப்பது என்பது இந்தியச் சட்டம் தொழிலாளர்களுக்குக் கொடுத்துள்ள அடிப்படையான உரிமைகளில் ஒன்று. ஆனால், பெரும்பாலான பெரு நிறுவனங்கள் சட்டத்தை மதித்து தொழிற்சங்கங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என்பதுதான் இங்கு நிதர்சனமான உண்மை. எட்டு மணி நேர வேலை, உழைப்புக் கேற்ற ஊதியம் என எதையும் மதிப்பதில்லை பெரு நிறுவனங்கள். சர்வதேச அளவில் தங்கள் பொருட்களுக்கு ஒரே விலையை நிர்ணயிக்கும் பெரு நிறுவனங்கள், தொழிலாளர்களின் ஊதியத்தில் மட்டும் பாகுபாடுகளைக் காட்டி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பெருநிறுவனங்களை அழைத்துவரும் அரசு, நாட்டின் சட்டத்தையும் அந்நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இனியும் திறமை வாய்ந்த இளம் இந்திய தொழிலாளர்களுக்கு அடிமட்ட மதிப்பில் ஊதியம் வழங்குவதை அனுமதிக்கக் கூடாது. அடிமட்ட சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும் நாடாக இந்தியா இருக்கக் கூடாது. உழைப்புக்கேற்ற ஊதியம் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூரில் போராடும் சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கள் அமைத்திடவும், அதன்மூலம் ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலையை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
from India News https://ift.tt/UebfQCI
0 Comments