Israel: ``இஸ்ரேல் விவகாரத்தில் பாஜக அரசின் மௌனத்துக்கு இதுதான் காரணம்.." - செல்வப்பெருந்தகை தாக்கு

பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் போரை நிறுத்த வேண்டும் என அமைதிக்கான மக்கள் இயக்கம் கருத்தரங்க கூட்டம் ராயப்பேட்டை ரம்ஜான் மஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ - வுமான செல்வப்பெருந்தகை, எம்.பி. நவாஸ் கனி, எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். அதில் பேசிய செல்வ பெருந்தகை, ``பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை எல்லா நாடுகளும் எதிர்க்கிறது. ஆனால் இந்தியா இதில் மௌனம் காக்கிறது.

செல்வப்பெருந்தகை

இஸ்ரேல் என்ற நாடு உருவாகும் போது, இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி, "எப்படி பிரிட்டிஷ் மண் பிரிட்டிஷ் காரர்களுக்கோ அது போல, பாலஸ்தீனம் பாலஸ்தீன குடிமக்களுக்கு தான் சொந்தம். இஸ்ரேலை அங்கீகரிக்க மாட்டோம்" எனக் குறிப்பிட்டார். இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, ``இஸ்ரேல் என்ற தனி நாடு உருவாகுவது தொடர்பாக ஐநா-வில் தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது. அதில், இஸ்ரேலுக்கு எதிராக வாக்களிப்போம்" எனக் குறிப்பிட்டார்.

செல்வப்பெருந்தகை

அதைத் தொடர்ந்து, பல்வேறு சூழல்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இந்தியா இருந்தது. இஸ்ரேலை துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளே அங்கீகரித்த போது, அப்போதைய பிரதமர் நேரு, 'மற்ற நாடுகள் ஏற்றாலும் அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நிர்வாக ரீதியாக மிகுந்த கவனத்துடனே இஸ்ரேலை அணுகுவோம்' என்றார். தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் அதே நிலைபாட்டைதான் தெரிவித்திருக்கிறார். இப்போது மட்டுமல்ல எப்போதும், இந்தியாவும், காங்கிரஸும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகதான் இருந்திருக்கிறது.

மகாத்மா காந்தியை தேசத் தந்தை என வாய்க் கூசாமல் சொல்லிக்கொள்பவர்கள், பாலஸ்தீன விவகாரத்தில் அவர் அளித்த அந்த தெளிவான கொள்கையை செயல்படுத்த வேண்டியது தானே... அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். ஏனென்றால், பாசிசத்துக்கு நாசிசத்தை பிடிக்கும். இந்தியாவில் ஜனநாயகம் குறித்து பேசுபவர்களை பாசிசம் ஒடுக்குகிறது. அதுபோல அங்கே நாசிசம் அழிக்கிறது. 104 நாடுகள் ஒன்றிணைந்து பாலஸ்தீன - இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து, கடிதம் எழுதியபோது, தற்போதைய மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அதற்கு ஆதரவு தராமல் பின்வாங்கியது.

பாலஸ்தீன போர் நிறுத்த கருத்தரங்கம்

அதற்கு முக்கிய காரணம் பெகாசாஸ். ஆம், ஒட்டுக்கேட்பதில் மிக சாதுர்ய நாடான இஸ்ரேலிடம்தான் பெகாசஸ் எனும் உளவு பொருளை வாங்கியிருக்கிறார் மோடி. அது மட்டுமல்லாமல் பல உளவு சாதானங்களை இந்தியா வாங்கியிருக்கிறது. ஒருவேளை மோடி அரசு இஸ்ரேலுக்கு எதிராக பேசினால், 'ஜனநாயக நாட்டில், அனுமதிக்கப்படாத உளவு சாதனங்களை ஏன் வாங்கினாய்...' என இஸ்ரேல் எதிர்த்துக் கேள்வி கேட்கும். அது தொடர்பான தகவல்களை வெளியிடும். அதனால்தான் மோடி தலைமையிலான அரசு இஸ்ரேல் விவகாரத்தில் கள்ள மௌனம் காக்கிறது. அதுசரி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருக்கும் திராவிடம் எனும் சொல்லையே நீக்கி பாடுகிற பாசிச அரசிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/4vWqTNg

Post a Comment

0 Comments