"கடந்த இரண்டு ஆண்டுகளாக, என் நாட்டிற்கு சேவை புரிந்தப்பின் வரும் நவம்பர் மாதம் நான் ஓய்வு பெறுகிறேன்.
என்னுடைய இந்த இரண்டு ஆண்டு பணிக்காலத்தை நிறைவாகவும், சிறப்பாகவும் செய்துள்ளேன். ஆனாலும், என் மனதில் இந்த நேரத்தில் பல குழப்பங்களும், பயங்களும் எழுந்திருக்கிறது.
'நான் என் பணியில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டேனா?', 'எனது பதவிக்காலத்தை வரலாறு என்னவாக பேசும்?', 'நான் இதுவரை செய்த விஷயங்களை வேறு மாதிரியாக செய்திருக்கலாமா?', 'வருங்கால நீதிபதிகளுக்கு, சட்டம் சார்ந்த நிபுணர்களுக்கு என்ன விட்டு செல்கிறேன்?' என்று பல கேள்விகள் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று சமீபத்தில் பூட்டானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியுள்ளார்.
2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமை நீதிபதியாக பதவியேற்ற சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 10-ம் தேதி அவரது 65 வயதில் நிறைவடைகிறது.
வழக்கமாக, ஓய்வுப்பெறும் தலைமை நீதிபதி தனக்கு பின் யார் இந்த பதவிக்கு வரலாம் என்பதை பரிந்துரைக்க வேண்டும். பின்னர், அந்த பரிந்துரை குறித்த முடிவை மத்திய அரசு எடுக்கும். இதுப்படி, தனக்கு பின் இவர் என சந்திரசூட் பரிந்துரைத்திருப்பவர் 'சஞ்சீவ் கண்ணா'.
தலைமை நீதிபதி பணி
தலைமை நீதிபதி என்பவர் இந்திய நீதி துறைக்கே தலைவர் ஆவார். மேலும் இவர் தான் உச்ச நீதிமன்றத்தின் தலைவரும் கூட. வழக்குகள் மற்றும் வழக்குகளை விசாரிக்கும் பென்ச் போன்ற நீதி துறையில் உள்ள முக்கியமான விஷயங்கள் இவரை சார்ந்து இயங்கும். தலைமை நீதிபதியாக இருப்பவர் தனது 65-வது வயது வரை இந்த பதவியில் நீடிக்கலாம்.
யார் இந்த சஞ்சீவ் கண்ணா?
இப்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகளிலேயே சந்திரசூட்டிற்கு அடுத்த சீனியர் நீதிபதி என்றால் அது 'சஞ்சீவ் கண்ணா' தான்.
இவர் முதன்முதலாக, 1983-ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தன் பணியை தொடங்கினார். பின்னர், டெல்லியில் இருக்கும் டிஷ் ஹசாரி காம்ப்ளக்ஸில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களிலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் பணி புரிந்துள்ளார்.
வருமான வரித் துறையில் சீனியர் வழக்கறிஞராகவும், 2004-ம் ஆண்டு தேசிய தலைநகர் டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் இருந்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 2005-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்று, 2006-ம் ஆண்டு நிரந்தர நீதிபதி ஆனார்.
2019-ம் ஆண்டு எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகாமலே, இவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆனார்.
2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக இருந்தார்.
சஞ்சீவ் கண்ணா தற்போது தேசிய சட்ட சேவை ஆணையத்தின் செயல் தலைவராகவும், போப்பாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமி ஆலோசகர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.
சந்திரசூட் பரிந்துரைத்த இவரே, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/oGRWnvX
0 Comments