அண்ணா நகர் போக்சோ வழக்கு... விகடன் கட்டுரையும் காவல்துறை விளக்கமும்!

'தமிழகத்தின் தலைநகராம் சென்னையின் அண்ணா நகரில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் செயல்பாடு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையை சுழற்றியதோடு, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து விகடன்.காம் தளத்தில் `காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் 'திராவிட மாடலே'... கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா?’ என்ற தலைப்பில் அக்டோபர் 2-ம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தற்போது அந்த கட்டுரைக்கு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கம் பின் வருமாறு...

``பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 30.8.2024 அன்று மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், W7அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கு.எண்.33/2024 ச/பி5(1)(m) உ/இ 6 போக்சோ சட்டம் 2012-ன் கீழ் அன்றைய தினமே வழக்கு பதிவு செய்யப்பட்டது.

- உயர் நீதிமன்றம்

விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோர்கள் மற்றும் மருத்துவ அதிகாரி ஆகியோரிடம் இருந்து, அன்றைய தினமே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையிலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு (வடக்கு) அதிகாரியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ஒரு சிறுவன் 1. 9.2024 அன்று கையகப்படுத்தப்பட்டார்.

சிறுமியின் வாக்குமூலம் மற்றும் சிறுமியின் தாயின் வாக்குமூலம் ஆகியவற்றில் முரண்பாடு இருந்த காரணத்தால், முறைப்படி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் எதிரி சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2.9.2024 அன்றே, 17-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் 9.9.2024 அன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு 12.9.2024 அன்று எதிரி சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது, இது அனைத்து பத்திரிக்கையிலும் வெளிவந்துள்ளது.

W7 காவல் ஆய்வாளர் ராஜீவ் மீது சிறுமியின் தாயார் 7.9.2024 அன்று அண்ணா நகர் காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணையை ஆய்வாளர் ராஜீவ் அவர்களிடமிருந்து மாற்றி புதிய விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் உமா மகேஸ்வரி நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 30.8.2024 முதல் 7.9.2024 வரை சிறுமி மருத்துவமனையில் உள் நோயாளியாக இருந்ததால் மருத்துவமனையிலேயே மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மனநல ஆலோசனை வழங்க கடிதமும் அனுப்பப்பட்டது. மன நல ஆலோசகர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரின் வேண்டுகோளின் படி உதவியாளரே இவ்வழக்கில் இருந்து விலக்கப்பட்டார். தவிர மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியின் தாயார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு பெற்றுள்ளார்கள்.

சிறுமியின் வாக்குமூலத்தை போக்சோ சட்டத்தின் படி கைப்பேசியில் மேற்படி ஆய்வாளர் ராஜீவ் பதிவு செய்தது எப்படி பொது வழியில் சென்றது என்பது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாக்குமூலத்தை வெளியிட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



from India News https://ift.tt/IhZfA6G

Post a Comment

0 Comments