மகாராஷ்டிரா தேர்தல்: அஜித்பவாரை எதிர்த்து மகன்; தர்மாராவை எதிர்த்து மகள்... சரத்பவாரின் வியூகம்..!

சரத்பவார் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 45 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் இஸ்லாம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கடோல் தொகுதியிலும், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பாட்டீல் மகன் யுகேந்திர பாட்டீல் பாராமதி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதே தொகுதியில் ஏற்கனவே அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இதனால் உறவினர்கள் இருவரும் மோதிக்கொள்கின்றனர்.

தரம்ராவ் மற்றும் மகள் பாக்யஸ்ரீ

சரத்பவார் அணியில் உள்ள 11 எம்.எல்.ஏ.களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அமைச்சர் சகன் புஜ்பால் போட்டியிடும் இயோலா மற்றும் அமைச்சர் தனஞ்சே முண்டே போட்டியிடும் பீட் தொகுதிக்கு இன்னும் வேட்பாளர்களை சரத்பவார் அறிவிக்கவில்லை.

இவர்கள் இருவரும் கட்சி உடைவதற்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள். இப்போது அஜித்பவார் அணியில் இருக்கின்றனர்.

பா.ஜ.கவில் இருந்து வந்த ஹர்ஷ்வர்தன் பாட்டீல், சந்தீப் நாயக், சமர்ஜீத் சிங் போன்றோருக்கும் சரத்பவார் தேர்தலில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

அஜித்பவார் அணியில் இருந்து வந்த எம்.எல்.ஏ.ராஜேந்திராவிற்கு சரத்பவார் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

கட்சி உடைந்தபோது தன்னுடன் இருந்த ஆதரவாளர்கள் 28 பேருக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருக்கும் சரத்பவார் புனே மாவட்டத்தில் மட்டும் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) கட்சியில் அமைச்சராக இருக்கும் தர்மாராவ் பாபாவிற்கு எதிராக அவரது மகள் பாக்யஸ்ரீயை சரத்பவார் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் அஹரி தொகுதியில் தந்தை மற்றும் மகள் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் வெளியிட்ட முதல் பட்டியல்..

காங்கிரஸ் கட்சியும் 48 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் நானாபட்டோலே, முன்னாள் முதல்வர் பிரித்விராஜ்சவான், எதிர்க்கட்சித் தலைவர் விஜய், முன்னாள் அமைச்சர் பாலாசாஹேப் தோரட், மறைந்த முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இரண்டு மகன்கள், தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 27 பேர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 5 பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.கவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை எதிர்த்து நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் பிரபுல் வினோத் ராவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மும்பை தாராவியில் மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் சகோதரி ஜோதி கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சாந்திவிலி தொகுதியில் நசீம் கானும், மலாடு மேற்கில் அஸ்லாம் ஷேக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் அசோக்சவானின் நெருங்கிய உறவினர் மினால் கெட்காவ்கருக்கு நாண்டெட் நைகாவ் தொகுதியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முதல் பட்டியலில் 4 முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாடியில் இடம் பெற்றுள்ள 3 கட்சிகளும் தலா 85 தொகுதியில் போட்டியிடும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. எஞ்சிய தொகுதிகளுக்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ''காங்கிரஸ் 104 தொகுதியிலும், சிவசேனா(உத்தவ்) 94 தொகுதியிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 84 தொகுதியிலும் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் விஜய் இது குறித்து கூறுகையில், காங்கிரஸ் 100 முதல் 104 தொகுதிகள் வரை போட்டியிடும் என்றும், அதில் 43 தொகுதிகள் விதர்பாவில் உள்ளவை என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சிக்கு சரத்பவார் தனக்கு ஒதுக்கிய தொகுதியில் இருந்து ஒரு தொகுதியை கொடுப்பார். எதிர்க்கட்சி கூட்டணியில் சமாஜ்வாடி கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 தொகுதிகளும், உழவர் உழைப்பாளர் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட இருக்கிறது.

தீர்வு எட்டப்படாமல் இருக்கும் 26 தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதியும், சிவசேனாவிற்கு 8 தொகுதியும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from India News https://ift.tt/FYAD2oH

Post a Comment

0 Comments