திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக தெலுங்கு தேசக் கட்சியால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆந்திரா அரசியலில் பெரும் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. 'ஆளும் அரசு அதிகாரத்துக்காக நாட்டின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை மீது கலங்கம் கற்பிக்கிறது" என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தெலுங்கு தேசக் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``திருப்பதி லட்டு விவகாரத்தில், முற்றிலும் அரசியல் நோக்கங்களுக்காக ஆளும் தெலுங்கு தேசக் கட்சி கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்துகிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானங்களின் புனிதம், ஒருமைப்பாடு மற்றும் நற்பெயரை சீர்செய்ய முடியாத வகையில் கெடுக்க சந்திரபாபு நாயுடு முயற்சி செய்கிறார்.
தற்போது ஆட்சியமைத்திருக்கும் புதிய அரசின் மீதான மக்களின் அதிருப்தியை திசைதிருப்பவும், அரசின் தோல்விகளை மறைக்கவும் திருப்பதி தேவஸ்தானத்தை பகடைகாயாக பயன்படுத்துகிறது தெலுங்கு தேசக் கட்சி. திருப்பதி கோயிலுக்கு வரும் ஒவ்வொரு நெய் டேங்கரும், (NABL) தேசிய அங்கீகாரம், சோதனை, அளவுத்திருத்த ஆய்வகங்களின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகளிடமிருந்து சான்றிதழ் பெற்றப் பின்னரே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு டேங்கரிலிருந்தும் மூன்று மாதிரிகள் பெறப்பட்டு, அதை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மூன்று மாதிரிகளும், சோதனையில் தேர்ச்சி பெற்ற பின்னரே, நெய் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
ஒரு நெய் மாதிரி தேர்ச்சிப்பெறவில்லை என்றாலும் கூட தரமற்றதாக கருதி அந்த டேங்கர் நிராகரிக்கப்படும். இப்படி பலமுறை நெய் டேங்கர்கள் நிராகரிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது. எனவே, பிரசாதம் தயாரிப்பதில் தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற அச்சத்துக்கு கொஞ்சமும் அவசியமில்லை. கலப்படம் செய்யப்பட்ட நெய் டேங்கர் ஜூலை 12-ம் தேதி திருப்பதிக்கு வந்தது உண்மைதான். ஆனால், திருப்பதி தேவஸ்தானம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் வலுவான சோதனைகள் மூலம், அதன் தரத்தை சோதனையிட்டு, அந்த கலப்பட நெய் நிராகரிக்கப்பட்டது. அதை பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படவில்லை.
இதையெல்லாம் தெரிந்தே சந்திரபாபு நாயுடு பொய்ப் பிரசாரம் செய்கிறார். மத உணர்வுகளை முற்றிலும் புறக்கணித்து, பொய்களைப் பரப்பும் தவறான நோக்கத்துடன், ஜூலை 12-ம் தேதி நடந்த சம்பவத்தை, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 18 அன்று அரசியல் கட்சி கூட்டத்தில் பேசி திட்டமிட்டு பெரிதாக்குகிறார். சந்திரபாபு நாயுடு பிறவிப் பொய்யர். அரசியல் நோக்கங்களுக்காக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை கடுமையாக புண்படுத்தும் வகையில் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவரின் செயல்கள் உண்மையில் ஒரு முதலமைச்சரின் அந்தஸ்தை மட்டுமல்ல, அனைவரின் அந்தஸ்தையும் குறைத்துவிட்டது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மை, சந்திரபாபு நாயுடுவின் வெட்கக்கேடான பொய்களால் நிலைகுலைந்திருக்கிறது. இப்போது முழு நாடும் பிரதமரான உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பொய்களைப் பரப்பும் வெட்கமற்ற செயலுக்காக சந்திரபாபு நாயுடு கடுமையான முறையில் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம். அதன்மூலம் கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் மனதில் உள்ள சந்தேகங்களை போக்கி, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/JRe6xFn
0 Comments