Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 274 பேர் பலி; தொடரும் போர் பதற்றம்

இஸ்ரேல் மற்றும் ஹாமஸ் இடையே நடந்துவரும் போரில் லெபனானில் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பானது, ஹாமஸ் அமைப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்பட்டு வந்தது. இதனால், ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் வாக்கிடாக்கி, பேஜர் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை சைபர் வழி தாக்குதல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள் உள்பட 3000 பேர் காயமடைந்தனர். குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டனர்.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

இதற்கிடையில், அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மோடி நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி காஸாவின் நிலை குறித்து ஆழ்ந்த கவலைத் தெரிவித்ததுடன், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவையும் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் போரை நிறுத்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயலலாம் எனவும் பேசியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், நேற்று இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில், "21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 5,000 பேர் காயமடைந்திருக்கின்றனர். இஸ்ரேல் இலக்காகக் குறிவைத்த கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களை, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தோம். அதனால் அந்தப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன" எனச் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த நகர்வாக ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திட இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதால், லெபனானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.



from India News https://ift.tt/Kf7Z02e

Post a Comment

0 Comments