வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு ஏற்றுவதுபோல், டோல்கேட்டிலும் ஒரு நடைமுறை உண்டு.
அதாவது - ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு தடவையாவது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிக் கட்டண விலையை மாற்றியமைக்கும்; அதாவது ஏற்றியமைக்கும். நீங்கள் ஏப்ரல் அல்லது செப்டம்பர் மாதங்களைக் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆண்டும் அதேபோல் சுங்கச்சாவடிக் கட்டணங்களில் விலையேற்றம் நடக்க இருக்கிறது. போன ஏப்ரல் மாதம் - நமக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம். அதாவது - மக்களவைத் தேர்தல் அறிவிப்பை ஒட்டி, அதை ஜூன் மாதத்துக்குக் கொஞ்சம் தள்ளி வைத்திருந்தார்கள்.
நம் தமிழ்நாட்டில் உள்ள 67 சுங்கச்சாவடிகளில், சுமார் 36 டோல்கேட்களில் கட்டண உயர்வை ஜூன் மாதம் அமல்படுத்தி இருந்தார்கள். இப்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 25 டோல்கேட்களில் கட்டண உயர்வை - இந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்த இருக்கிறார்கள். இதில் 5 முதல் 7 சதவிகிதம் வரை கட்டண உயர்வு அமுல்படுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக கார்களுக்கும் மற்ற கனரக வாகனங்களுக்கும் சுமார் 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் ஏற்றப்படலாம் என்று தெரிகிறது.
சுங்கக் கட்டண வசூலில் தமிழ்நாடு போன நிதியாண்டில் சுமார் 4,221 கோடி வசூலித்திருக்கிறது. வசூலைப் பொருத்தவரை இது 5-வது இடம். முதல் இடத்தில் உத்தரப் பிரதேசம், அடுத்து ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்கள் வரிசையாக இருக்கின்றன.
இந்தக் கட்டண உயர்வை எதிர்த்து வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நம் ஊர் அரசியல்வாதிகளும், விஐபிக்களும் கருத்துச் சொல்லி வருகிறார்கள்.
அதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‛‛சுங்கக் கட்டணத்தின் நோக்கமே சாலை அமைத்த கட்டணத்தை வசூல் செய்வதற்குத்தான். அதன் பிறகு பராமரிப்புக்காக மட்டும்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், இவர்கள் அதற்கு நேரெதிராகக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே மக்கள் பல வரிகளைக் கட்டி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேறு!’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போன்ற பல அரசியல்வாதிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கட்டண உயர்வால், நிச்சயம் லாஜிஸ்டிக்ஸ் பாதிக்கப்படும். சரக்கு வாகனங்களின் வாடகை உயரும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் எகிறும். கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க நெடுஞ்சாலை ஆணையமே!
from India News https://ift.tt/KqbYoLs
0 Comments