பசி ஓர் உலக மொழி. மனிதன் தோன்றிய நாள்முதல் அவனுடனேயே ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பசியால் மட்டும் ஆண்டுக்கு 9 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர் என்று தரவுகள் கூறுகின்றன. இதனால், நாள்தோறும் 25,000 பேர் உயிரிழக்கின்றனர். அதில், 10,000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். மேலும், 2023-ம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான உலக அறிக்கையின்படி, 2022-ல் மட்டும் 691 முதல் 783 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டிருக்கின்றனர்.
பசியின் கொடுமை இவ்வாறு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், நமீபியா (Namibia) நாட்டு அரசு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்களின் மக்களுக்கு உணவளிக்க 700-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வேட்டையாட முடிவெடுத்திருக்கிறது. முன்னதாக, நமீபியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருந்தாகக் கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, நமீபியாவின் சுற்றுச்சூழல், வனவியல் மற்றும் சுற்றுலா அமைச்சகம், "நாட்டில் அதிகரித்து வரும் பசி நெருக்கடியைத் தணிக்கும் வகையில், வறட்சி நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக அழிக்கப்படும் 723 விலங்குகளின் இறைச்சி மக்களுக்கு விநியோகிக்கப்படும்." என்று கடந்த திங்களன்று அறிவித்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ``30 நீர்யானைகள், 60 எருமைகள், 50 ஆப்பிரிக்க சிறுமான் (impala), 100 நீலக் காட்டுமான் (Blue wildebeest), 300 வரிக்குதிரைகள், 83 யானைகள், 100 எலண்ட்கள் என 723 வனவிலங்குகள் இதில் அடக்கம். இவை, தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட பகுதியிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெறப்படும்.
மேலும், இந்த வேட்டையாடல் நடவடிக்கையானது அமைச்சகத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழில்முறை வேட்டைக்காரர்களைக் கொண்டு குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும். மாங்கெட்டி தேசிய பூங்காவில் (Mangetti National Park) இதுவரை 157 விலங்குகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், ஜிம்பாப்வே, சாம்பியா, மலாவி உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பசி நெருக்கடியைப் பேரழிவு நிலை என்று அறிவித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/f6y87iZ
0 Comments