``புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க முடியும்" எனத் தெரிவித்து இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல்தவணை நிதியான ரூ.573 கோடியையும் கடந்த ஆண்டுக்கான ரூ.249 கோடியையும் கொடுக்காமல் மத்திய பா.ஜ.க அரசு பிளாக் மெயில் செய்து வருகிறது.
பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்:
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ``தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதிவிடுவிக்கப்படவில்லை. 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,152 கோடியாகும். இதற்கான முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், முதல் தவணையான ரூ.573 கோடியும் முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியும் விடுவிக்கவில்லை. பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் தேசியகல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவது, நிதியைபெறுவதற்கான முன்நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சிப்பது தெரியவந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. எனவே,பொதுப்பட்டியலில் உள்ள கல்விதொடர்பான விஷயங்களில் மாணவர்களை பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும்போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும். சமக்ரா சிக் ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும். எனவே, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடி இதில் நேரடியாக தலையிட வேண்டும். விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது!" எனத் தெரிவித்திருக்கிறார்.
கண்டனம் தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்:
இதுகுறித்து கண்டன அறிக்கை விடுத்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ``மத்திய அரசு நடப்பாண்டிற்கான முதல் தவணை நிதியை ஜூன் மாதத்தில் விடுவித்திருக்க வேண்டும். அப்படி விடுவிக்காத நிலையில் ஒன்றிய அரசுக்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு பலமுறை கடிதங்கள் தமிழக அரசால் எழுதப்பட்டது. இதனால் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிற மாநில கல்வித்துறை கடும் பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஏறத்தாழ 15,000 ஆசிரியர்களுக்கு வருகிற மாதத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேருகிற ஏழை,எளிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்" என்றிருக்கிறார்.
அதேபோல பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஆய்வுக் கூட்டத்தின் போது, தமிழ்நாட்டில் பி.எம்ஸ்ரீ பள்ளிகளை தமிழக அரசு திறக்க வேண்டும்; அவற்றில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்; தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் 10+2+3 கல்வி முறைக்கு மாறாக, 5+3+3+4 கல்வி முறையை கடைபிடிக்க வேண்டும்; தொழில்கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், அந்த நிபந்தனைகள் இல்லாமல் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்துவதாக தமிழக அரசு அரசு தெரிவித்த யோசனையை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மாநில அரசுகள் தங்களுக்கான கல்விக் கொள்கையை வகுத்துக் கொள்ள அதிகாரம் உள்ளது. எனவே, புதிய கல்விக் கொள்கையையும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளையும் காரணம் காட்டி ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை மறுப்பது அநீதி. மத்திய அரசு நிதி வழங்காததால், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சி, கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ஆகியவற்றையும் வழங்க முடியாத நிலைக்கு தமிழக அரசு ஆளாகியிருக்கிறது. இப்படி ஒரு நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடாது" என வலியுறுத்தியிருக்கிறார்.
பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டமும் எதிர்ப்பும்:
கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் மூலம், இந்தியா முழுவதும் சுமார் 14,500 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை முன்மாதிரிப் பள்ளிகளாக மேம்படுத்தி, உயர்தரமான கல்வி, கட்டமைப்பு, பாதுகாப்பான சூழல் என சகல வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும் என்றும் இதனால் ஆண்டுக்கு 20 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்' தெரிவிக்கப்பட்டது.
அப்போதே இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கல்வியாளர்கள், ``மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகள் மட்டும் அனைத்து வசதிகளுடன் ஆகச்சிறந்தப் பள்ளிகளாக்கப்படுமாம்; மற்றப் பள்ளிகளெல்லாம் சாதாரணப் பள்ளிகளாகவே இருக்குமாம்! இது எவ்வளவு பெரிய அநீதி! இரண்டு பள்ளிகளுமே மக்களின் வரிப்பணத்தில் இயங்கும்போது, ஒரு பள்ளிக்கு எல்லாமும் மற்ற பள்ளிக்கு எதுவுமே கொடுக்காமல் இருப்பது குழந்தைகளின் உரிமையைப் பறிக்கக்கூடிய வேலை! இப்படி பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைச் சட்டத்துக்கே எதிரானது. இது வெறுமனவே இந்தி திணிப்பு, மும்மொழிக்கொள்கைக்காக மட்டுமே எதிர்க்கவில்லை. பள்ளிகளிடையே பாகுபாட்டையும் மாணவர்களிடையே சமத்துவமற்ற கல்வியை புகுத்துவதாலும்தான் எதிர்க்கிறோம்!" என்றனர்.
பிளாக்மெயில் செய்யும் மத்திய அரசு!
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் உயரதிகாரிகள் நம்மிடையே பேசியபோது, ``கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஏற்கெனவே உள்ள பல்வேறு கல்வித் திட்டங்களை ஒருங்கிணைத்து `சமக்ர சிக்ஷா' என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின்மூலம் அனைத்து மாநிலங்களிலுமுள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், அரசுப் பள்ளி கட்டடங்களைப் பராமரிப்பது, விளையாட்டு வசதிகள், நூலகங்கள் என கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக்கொடுப்பதற்காகவும் ஒவ்வொரு கல்வியாண்டும் நிதியுதவி வழங்கிவருகிறது.
அந்தவகையில், 2023-24-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டுக்கான நிதியுதவி ரூ.3,300 கோடியை (மாநில அரசு 40%-மத்திய அரசு 60%) மத்திய அரசு நான்கு தவணையாக வழங்க வேண்டும். அதில், முதல் மூன்று தவணை நிதியை விடுவித்த மத்திய அரசு கடைசி தவணை நிதி ரூ.249 கோடியையும், இந்த ஆண்டுக்கான (2024-25) ரூ.573 கோடியையும் கொடுக்கவில்லை. ஏற்கெனவே இதுகுறித்து மத்திய அரசிடம் நாங்கள் முறையிட்டபோது, `நாங்கள் சமக்ர சிக்ஷாவையும், பிஎம் ஸ்ரீ பள்ளிகளையும் இன்டர்லிங்க் செய்துவிட்டோம். நீங்கள் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தையும் ஏற்றுக்கொண்டால்தான் மீதமுள்ள நிதியைத் தருவோம்' எனக்கூறி மறுத்துவிட்டார்கள்.
முதலில், சமக்ர சிக்ஷா என்பது தனித்திட்டம், அதேபோல பிஎம் ஸ்ரீ என்பதும் தனித்திட்டம். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இரண்டுக்கும் தனித்தனியாகத்தான் நிதி ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, சமக்ர சிக்ஷாவுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்திவைப்பதும், பிஎம் ஸ்ரீ திட்டத்தை நிறைவேற்றினால்தான் நிதியை விடுவிப்போம் என்று சொல்வதையும் எப்படி ஏற்கமுடியும்? என்று கேட்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதானை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் அவரும், `பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் நிதி தரமுடியும். இல்லையெனில் கொடுக்கமுடியாது. நீங்கள் உங்கள் அரசுடன் பேசி ஒரு முடிவெடுத்துவிட்டு வாருங்கள்' என வெளிப்படையாகவேகூறி அனுப்பிவிட்டார். மத்திய அரசின் நிதியை நம்பி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவிட்டோம். ஆசிரியர்களுக்கான சம்பளமும் கொடுக்கவேண்டும். நாம் கையெழுத்திடாமல் இருந்தால் நமக்கு வரக்கூடிய நிதியை முற்றிலும் நிறுத்திவிடுவார்கள். இதனால் கல்வித்திட்டங்கள் முடங்கிப்போகும்!" என்றனர்.
`தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்!'
இந்த நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடுமுழுவதும் சென்றடைவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. மாணவர்களின் கல்வி எதிர்காலத்துக்கு அரசியல் கொள்கைகள் தடையாக இருக்கக்கூடாது. ஆக தமிழ்நாடு அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்!" என வலியுறுத்தியிருக்கிறார்.
மாணவர்களின் கல்வி விஷயத்தில் குழப்பம் நீடிப்பது நல்லது அல்ல. மத்திய அரசு நிபந்தனை விதிப்பதும் ஏற்புடையது அல்ல. மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில், அரசியலை கடந்து மாணவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/9uvcByk
0 Comments