சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஒருவருக்கொருவர் கருத்துமோதிக்கொண்டு வெளிநடப்பு செய்தது முதல் பா.ஜ.க. கவுன்சிலர் தி.மு.க அரசைப் புகழ்ந்து பாராட்டியதுமாக எதிரும் புதிருமாக நடந்துமுடிந்திருக்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆகஸ்ட் மாத மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று(29-08-2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முதல்நிகழ்வாக வயநாடு நிலச்சரிவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 15 மண்டலங்களையும் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலுள்ள பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
``பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நத்தம் புறம்போக்கு நிலத்திலிருக்கும் வீடுகளுக்கும் வரி விதிக்க வேண்டும்" என தி.மு.க கவுன்சிலர்கள், கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக, தி.மு.க நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதன், ``சென்னை மாநகராட்சியில் மூன்று கமிஷனர்கள் மாறிய பின்பும் இதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை; இதனால் ஒரு லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்" என்றார். அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ``இது தமிழ்நாடு அரசு சம்மந்தப்பட்டது. நாம் இதில் எதுவும் செய்ய முடியாது" என்றார்.
உடனே இடைமறித்த நிலைக்குத் தலைவர் தனசேகரன், ``நாங்கள் ஒன்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு வரிவிதிக்கவேண்டும் என சொல்லவில்லை. நத்தம் புறம்போக்கிலும், மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்திலும் குடியிருக்கும் மக்களின் வீடுகளுக்குத்தான் வரிவிதிக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான `ரெட் ஃபார்ம்' வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் கொடுத்த ஆன்லைன் பட்டாவுக்கே வரி விதிக்காமல் இருப்பது சரியா?'' எனக் கேள்வி எழுப்பினார். அதையடுத்து துணைமேயர் மகேஷ்குமாரும், ``அரசுக்கு தேவைப்படும்போது எப்போது வேண்டுமானாலும் அஃபிடாவிட் போட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளலாம், அதுவரை மக்கள் அந்த இடத்தில் வரிகட்டி வாழலாம்' என்ற பழைய நடைமுறை அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து!" என்றார்.
இதுநீண்ட விவாதமாக மாறவும் மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன், ``இதுபோன்ற நிலங்களுக்கு ரெட் ஃபார்ம் கொடுப்பது தமிழ்நாடு அரசால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆட்சேபனை இல்லாத நிலங்களில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வரி வசூலிக்க மாநகராட்சிக்கு அரசு அனுமதி கொடுத்தால் நாம் செய்யலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புள்ளி விவரங்கள் பெற்றபின்னர், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதுவோம். ஒருவாரத்துக்குள் இந்த பிரச்னை குறித்து ஒரு முடிவெடுக்கப்படும்!" என்றார்.
தொடர்ந்து 142-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ``பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரத்தைத் தூர்வாரவேண்டும், சமுதாய நலக்கூடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன்பதிவு செய்யும் வசதி உரிமையை அந்தந்த மண்டலங்களுக்கே வழங்க வேண்டும்" என்றார். அதேபோல 141-வது வார்டு கவுன்சிலர் ராஜா அன்பழகன், ``சென்னை மாநகராட்சியில் 4,635 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. அதை நிரப்பவேண்டும்" என்றார். 143-வது வார்டு கவுன்சிலர் ராஜன், ``கூவம் நதியை சீரமைக்க வேண்டும்" என்றார்.
32-வது வார்டு ம.தி.மு.க கவுன்சிலர் ஜீவன், ``மழைநீர் வடிகால் உள்ளிட்டப் பணிகளில் நான் சொல்லும் கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் கேட்பதே இல்லை!" எனக் கோவமாகப் பேசினார். இதனால் அதிருப்தியடைந்த தி.மு.க கவுன்சிலர்கள் எழுந்து, ``தமிழ்நாட்டிலேயே சென்னை மாநகராட்சிதான் மிகச் சிறப்பாக செயல்படுகிறது" என பதிலடி கொடுத்தார். உடனே `முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு பேச வேண்டாம்' என தி.மு.க கவுன்சிலரைப் பார்த்து ம.தி.மு.க கவுன்சிலர் பேச விவாதம் சூடுபிடித்தது. எல்லைமீறிச் சென்ற விவாதத்தை திமுக ஆளும்கட்சித் தலைவர் ராமலிங்கம் தடுத்துநிறுத்தியதோடு, ``அவர்கள் பேசட்டும். நாம் பதில்சொல்வோம்!" என்று கூறி அமர்ந்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய ம.தி.மு.க கவுன்சிலர் ஜீவன், ``எனது வார்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகப்புற வாழ்விட மையங்களிலும் மருத்துவர்கள், செலவிலியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல, வட சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வந்து பாடம் நடத்த ஆசிரியர்கள் தயங்குகிறார்கள். வட சென்னை மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் அவர்களுக்கு என்ன சிரமம்? என்னைப் பொறுத்தவரையில் சென்னையில் தெற்கு வாழ்கிறது; வடக்கு தேய்கிறது!" எனக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து 42-வது வார்டு சி.பி.ஐ கவுன்சிலர் ரேணுகா, ``கடந்த மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தொழில்வரி உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு முறையாக ஊதியம் வழங்காததால், பயனாளிகள் எண்ணிக்கை குறைந்து சத்தமில்லாமல் அந்தத் திட்டம் முடங்கிக்கிடக்கிறது. அதேபோல, சென்னை மாநகராட்சி மருத்துவத் துறையில் 102 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை, திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் எஞ்சியுள்ள 4 மண்டலத்தின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது. இது `எல்லோருக்கும் எல்லாம்' என்று நீங்கள் சொல்லும் திராவிட மாடல் அரசுக்கே எதிரானது. அதேபோல, முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தை மூடிவிட்டு அதில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்போவதாக கூறப்பட்டிருக்கும் தீர்மானத்தையும் கடுமையாக எதிர்க்கிறோம்!" என காட்டமாக எதிர்ப்புக்குரல் எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த துணை மேயர் மகேஷ்குமார், ``தனியார்மயம் ஆக்கப்பட்டாலும் ஏற்கெனவே அதில் பணிசெய்துவரும் தூய்மைப் பணியாளர்களுக்கே தொடர்ந்து பணிவழங்கப்பட்டுவருகிறது!" என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சி.பி.ஐ கவுன்சிலர் ரேணுகா, ``அதில் 50 வயதுக்கு மேல் இருப்பவர்களை பணியில் நீட்டிக்காமல், பணியைவிட்டு அனுப்பிவிடுகின்றனர். அதேபோல, சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் குப்பைகளைத் தரம்பிரிக்காமல் அப்படியே கொட்டுகின்றனர். எனது வார்டுக்குட்டப்பட்ட பகுதியிலேயே இந்த சம்பவம் நடந்ததை நான் வீடியோ ஆதாரத்துடன் வைத்திருக்கிறேன். எனவே, தனியாரிடம் கொடுக்கப்பட்ட இடங்களில் தூய்மைப்பணி திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்வது தவறானது!" என்றார்.
அதைத்தொடந்து கோவமாகப் பேசிய மேயர் பிரியா, ``தனியார் நிறுவனம் குப்பைகளைத் தரம்பிரிக்காமல் அப்படியே கொட்டுகிறது என்றால் அதுகுறித்து முதலில் ஏன் எங்களிடம் நீங்கள் புகார் தெரிவிக்கவில்லை? நடவடிக்கை எதிர்க்கும் அதிகாரம் எங்களிடம் இருக்கும்போது என்னிடமோ, கமிஷனரிடமோ கம்ப்ளைண்ட் கொடுக்காமல் நேரடியாக மாமன்றத்தில் இப்படி சொல்வது தவறு!" என்றார். மீண்டும் ரேணுகா, ``மாநகராட்சியிடம் இருந்தபோது சிறப்பாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்கு இந்த திட்டத்தை நாமே செயல்படுத்தலாமே?" என்றார். இதனால் கடுப்பான மேயர் பிரியா, ``இது ஒன்றும் விவாத மேடை அல்ல! மாமன்றக் கூட்டம். இங்கு உங்களின் கருத்துக்களை மட்டும் பதிவு செய்யுங்கள்!" என்று கடுகடுத்தார். அதற்கு ரேணுகா, ``நானும் கருத்துதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்" என்று பதில்சொல்லி அமர்ந்தார். இதனால் அவை சிறிது பரபப்பானது.
எதிர்ப்புக் கோஷத்துடன் வெளிநடப்பு செய்த சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க கவுன்சிலர்கள்:
மாமன்றக் கூட்டத்தின் இறுதியாக சுமார் 50-க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற மேயர் பிரியா முன்வந்தார். அப்போது, `சென்னை பள்ளியை வட்டாசியர் அலுவகமாக மாற்றம் படும் (பொருள் எண்: 30) தீர்மானத்துக்கு வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, ``அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும் பள்ளிக்கூடம் பழையபடி பள்ளிக்கூடமாகவே இயங்கும்" என்று மேயர் பிரியா பதிலளித்தார். தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மைத் துறையில் உள்ள தூய்மைப் பணிகள், குப்பைகள் தரம்பிரித்தல், வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியாருக்குவிடும் தீர்மானங்களை (பொருள் எண்: 37, 38,39) நிறைவேற்றக்கூடாது எனக் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தனர். இதை ஏற்காத மேயர் பிரியா இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `தீர்மானத்தை எதிர்க்கிறோம்' என்று அவையில் கோஷமிட்டபடியே தி.மு.க கூட்டணிக் கட்சிகளான வி.சி.க, சி.பி.ஐ., சி.பி.எம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கலைஞர், ஸ்டாலின், தி.மு.கவைப் பாராட்டிய பா.ஜ.க கவுன்சிலர்:
முன்னதாக பா.ஜ.க கவுன்சிலரான உமா ஆனந்த், ``கலைஞர் கருணாநிதியின் பெருமையை நாங்கள் போற்றுகிறோம். தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவருக்கு நூற்றாண்டு நாணயம் வெளியிட்டத்தில் நாங்கள் பெருமையாகவும், அவருக்கு செய்யும் மரியாதையாகவும் நினைக்கிறோம்! அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் சாலைப் பணிகள் போன்ற திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்திவருகிறார். குறைகளை சுட்டிக்காட்டுவதைப்போல நிறைகளையும் நாங்கள் பாராட்டுவோம்" என்று புகழாரம் சூட்டினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமாக 23 ஆண்டுகளாக வீடுகேட்டுப் போராடிவரும் கண்ணப்பர் திடல் மக்களுக்காக மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு வழங்குவதற்கு, மக்கள் அரசுக்கு கட்டவேண்டிய பயனாளிகள் பங்களிப்புக் தொகை ரூ.4,27,000 ரூபாயில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை சென்னை மாநகராட்சியே வழங்கும் என மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கண்ணப்பர் திடல் மக்கள் பிரச்னை தொடர்பாக, 1.09.2024 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், `வாழ்வதற்கு ஒரு வீடு...’ - கால் நூற்றாண்டுப் போராட்டம்... காசு கேட்கும் அரசு!" என்ற தலைப்பில் கள ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தோம். அதில், ``கண்ணப்பர் திடல் மக்களின் நியாயமான கோரிக்கை சட்டப்படி நிறைவேற்றப்படும்" என மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/8boKhyB
0 Comments